செய்திகள்
கொரோனா வைரஸ்

இங்கிலாந்தில் பரவி வந்த உருமாறிய கொரோனா தொற்று இலங்கையிலும் கண்டுபிடிப்பு

Published On 2021-02-13 02:12 GMT   |   Update On 2021-02-13 02:12 GMT
இங்கிலாந்தில் பரவி வந்த உருமாறிய கொரோனா தொற்று இலங்கையில் கண்டறியப்பட்டு இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு:

சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதையும் வாட்டி வரும் நிலையில், இதன் உருமாறிய வகைகள் பல நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்தில் ஒருவகை புதிய தொற்று பரவுவது கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. வுகான் கொரோனாவை விட 70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்ட இந்த தொற்று இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கும் பரவி உள்ளது.

இந்த புதிய வகை கொரோனா தற்போது இலங்கையிலும் கண்டறியப்பட்டு உள்ளது. இதை கொழும்பு ஜெயவர்தனேபுரா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் டாக்டர் சண்டிமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார். இந்த தொற்று வீரியமாக பரவக்கூடியது எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 379 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், தற்போதும் நாள்தோறும் 800-க்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் உருமாறிய கொரோனா தொற்றும் அங்கு கண்டறியப்பட்டு இருப்பது இலங்கையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா அளித்த தடுப்பூசிகள் மூலம் இலங்கையில் கடந்த மாத இறுதியில் இருந்தே தடுப்பூசி திட்டம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News