செய்திகள்
ராகுல் காந்தியின் பேச்சை மாணவி மொழிபெயர்த்த காட்சி.

ராகுல் பேச்சை மொழிபெயர்த்து அசத்திய கேரள அரசு பள்ளி மாணவி

Published On 2019-12-06 04:30 GMT   |   Update On 2019-12-06 04:30 GMT
வயநாட்டில் நடந்த விழாவில் ராகுல் காந்தியின் பேச்சை சரளமாக மொழிபெயர்த்த கேரள அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராகுல்காந்தி தனது தொகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ராகுல்காந்தி நேற்று மலப்புரம் அருகே உள்ள கருவாரக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அறிவியல் அரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதன்பிறகு அங்கு நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசினார். ராகுல் மேடை ஏறியதும் அங்கு கூடியிருந்த மாணவர்கள் கை தட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள். மாணவர்களின் கரகோ‌ஷத்தை சிரித்த முகத்துடன் ரசித்த ராகுல் காந்தி திடீரென்று கூட்டத்தினரை பார்த்து நான் இந்த விழாவில் ஆங்கிலத்தில் பேசுவதை உங்களில் யாராவது மலையாளத்தில் மொழி பெயர்க்க தயாரா? விருப்பம் உள்ளவர்கள் கை தூக்குங்கள் என்று கேட்டார்.

உடனே கூட்டத்தினர் அமைதியானார்கள். அப்போது பிளஸ்-2 மாணவி ‌ஷபா பபின் என்பவர் தனது கையை உயர்த்தி ராகுலின் பேச்சை மொழிபெயர்க்க தயார் என்று கூறினார். அவரை மேடைக்கு அழைத்த ராகுல் காந்தி தனது பேச்சை சரியான முறையில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவரிடம் கூறினார்.



அதைத்தொடர்ந்து ராகுல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவரது பேச்சை எந்தவித தங்கு தடையும் இன்றி ‌ஷபா பபின் சரளமாக மொழிபெயர்க்க ஆரம்பித்தார். எந்த பதட்டமும் இல்லாமல் மாணவி மொழிபெயர்த்ததால் அங்கு கூடியிருந்த ஆசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

தனது பேச்சை முடித்த ராகுல்காந்தி மாணவியின் அருகில் சென்று அவருக்கு கைகொடுத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு சாக்லெட் பரிசளித்து மகிழ்ந்தார்.

மேலும் பள்ளி ஆசிரியைகளும், சக மாணவிகளும் ‌ஷபா பபினை பாராட்டினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் ராகுலின் பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்த அதிர்ஷ்டம் கிடைத்தது பற்றி மாணவி ‌ஷபா பபின் கூறியதாவது:-

நான் மதிக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் ராகுல். மலப்புரம் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுலின் பேச்சை கேட்டு இருக்கிறேன். அவர் எங்கள் பள்ளிக்கூட விழாவிற்கு வருகிறார் என்றதும் அவரது பேச்சை கேட்கும் நோக்கத்துடனேயே சென்றேன். ஆனால் ராகுலின் பேச்சை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

தனது பேச்சை மொழிபெயர்க்க யார் தயாராக உள்ளீர்கள் என்று ராகுல் கேட்டதும் என்னை அறியாமல் நான் கையை தூக்கி விடடேன். நான் மேடை ஏறியதும் ராகுல் என்னிடம் எனது பேச்சை நீ தெளிவாக மொழிபெயர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீங்கள் மெதுவாக பேசினால் நானும் சிறப்பாக மொழிபெயர்க்கிறேன் என்று கூறினேன். அவரும் எனக்கு வசதியாக மெதுவாகவும், தெளிவாகவும் பேசினார். நான் அவரது பேச்சை மொழிபெயர்க்க தொடங்கியதும் கூட்டத்தில் இருந்து கரகோ‌ஷம் எழத்தொடங்கியதால் உற்சாகத்துடன் மொழிபெயர்த்து முடித்தேன்.

ராகுல் கைகுலுக்கி என்னை பாராட்டி சாக்லெட் பரிசளித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. நான் சிறப்பாக மொழி பெயர்த்ததற்கு ராகுலுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

படித்து முடித்தபிறகு எதிர்காலத்தில் ஆசிரியராக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆசிரியர் பணி என்பது மற்றவர்களுடன் தங்குதடையின்றி தொடர்பு கொள்வது ஆகும்.ராகுலின் பேச்சை மொழிபெயர்த்தது எனது ஆசிரியை பணி லட்சியத்திற்கு ஒரு உந்துதலாக அமைந்துவிட்டது.

நான் ராகுலின் பேச்சை மொழி பெயர்த்த போது எங்கள் ஊர் பேச்சு மொழியில் மலையாளத்தில் மொழிபெயர்த்தேன் அதை பள்ளி ஆசிரியைகள் மிகவும் பாராட்டினார்கள்.

‌ஷபா பபினின் தந்தை குன்னிமுகமது. இவர் மதரசா பள்ளி ஆசிரியராக உள்ளார்.
Tags:    

Similar News