செய்திகள்
கலெக்டர் ஜான் லூயிஸ்

வங்கி, நகை அடகு தொழில் புரிவோருக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார்

Published On 2021-03-08 16:02 GMT   |   Update On 2021-03-08 16:02 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்கி, நகை அடகு தொழில் புரிவோருக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) என 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை அமலில் உள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் பண பரிவர்த்தனை நிகழும் போது அவர் குறித்த தகவல்களை வங்கிகளிடம் இருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கி கணக்கு தேர்தல் காலத்தின் போது பண பரிவர்த்தனை நடைபெற்றால் அவை குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

வேட்பாளர், அவரது மனைவி சார்ந்தோர் அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் வேட்பாளர் அவரது வங்கி கணக்கு விவரங்கள் குறிப்பிட்ட உறுதிமொழி பத்திரம் தலைமை தேர்தல் அலுவலரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

ஒரு வங்கி கணக்கில் கடந்த 2 மாதங்களாக பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென சந்தேகத்துக்கிடமான வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் அரசியல் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டால் அதன் விவரங்களையும் உடனே தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனைகள் மேற்சொன்ன விதிமுறைப்படி சட்டமன்ற பொதுத்தேர்தல் நேர்மையாகவும் சுமுகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு உதவினால் எந்த ஒரு உரிமையாளரும் ஏற்று கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகவும் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள் முகவர்களால் மொத்தமாக மீட்கப்பட்டு வாக்காளர்களுக்கு திரும்பி வழங்குவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக அடகு நகைகளை திரும்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்துக்கிடமான வகையில் மீட்கும் போது அவை குறித்த விவரங்கள் உடனடியாக அருகாமையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராகவும் மேற்சொன்ன விதிமுறைப்படி சட்டமன்ற தேர்தல் நேர்மையாகவும் சுமுகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News