செய்திகள்
போலீஸ் கமிஷனர் கமல்பந்த்

பெங்களூருவில் வருகிற 16-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Published On 2021-08-05 02:14 GMT   |   Update On 2021-08-05 02:14 GMT
பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் 144 தடை உத்தரவு பொருந்தாது.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா பரவல் நாளுக்கு, நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து பெங்களூருவுக்கு வருபவர்களால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கொரோனா 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதன் காரணமாக பெங்களூருவுக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கவும் பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வருகிற 16-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பொது இடங்களில் 4 பேருக்கு மேல் சேருவதற்கு அனுமதி கிடையாது.

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடத்துவதற்கும் அனுமதி கிடையாது. பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் 144 தடை உத்தரவு பொருந்தாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News