செய்திகள்
திருட்டு

ஓசூர் அருகே கடையில் துளை போட்டு செல்போன்கள் திருட்டு

Published On 2021-09-15 17:55 GMT   |   Update On 2021-09-15 17:55 GMT
ஓசூர் அருகே கடையில் துளை போட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஓசூர்:

ஓசூர் அருகே பாகலூர் ராஜீவ் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் தீபக் (வயது 23), இவர் பாகலூர் பஸ் நிலையம் அருகில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வழக்கம் போல் கடைக்கு வந்தார். கடையை திறந்த போது கடையின் ஒருபக்கம் சுவரில் துளை போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பகலில் கடையை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரவு நேரத்தில் கடையின் ஒரு பக்க சுவரில் துளை போட்டு கடைக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த 20 செல்போன்கள் அதாவது ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி விட்டு அந்த துளை வழியாக தப்பி சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், அவர்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த திருட்டு குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்தில் தீபக் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பாகலூர் பஸ் நிலையம் பகுதியில் கடையில் துளை போட்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News