செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில், பாலவிநாயகர் கோவில், மற்றும் வீடுகளில் விளக்கேற்றிய பெண்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள் - கோவில்களில் தீபம் ஏற்றி கார்த்திகை வழிபாடு

Published On 2021-11-20 09:33 GMT   |   Update On 2021-11-20 09:33 GMT
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் மாலை 7 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாநகரில் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமிகோவில், ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில்களில் நேற்று மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.  

தொடர்ந்து மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றி கோவிலை வலம் வந்து கொடி மரம் அருகே வைக்கப்பட்டது. கோவில் வாசலில் சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.  

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் மாலை 7 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   

அதைத்தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இதேப்போல் மாவட்டம் முழுவதும் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்களில் நேற்று மாலை தீபம்  ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. தீபவிளக்குகளால் திருப்பூர் மாநகரம் தீப ஒளியில் ஜொலித்தது. 

சில இடங்களில் சிறுவர் சிறுமிகள் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் காங்கயம் காசிவிஸ்வநாதர் கோவில், காடையூர் காடேஸ்வரர் கோவிலில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில்,மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.  
Tags:    

Similar News