ஆன்மிகம்
இஸ்லாம்

நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது...

Published On 2020-01-07 03:59 GMT   |   Update On 2020-01-07 03:59 GMT
இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது’ குறித்த தகவல்களை காண்போம்.
நல்ல வழியில் சம்பாதிப்பதும், அதை நல்ல வழியில் செலவளிப்பதும் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. குடும்பத்திற்காக, ஆதரவற்றோருக்காக பாடுபடுவது, அவர்களுக்காக செலவு செய்வது யாவுமே இறைநம்பிக்கைதான். இதை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக தேர்வு செய்கிறது. இந்த உழைப்பும், வரவும், செலவும் முறையான வழியில் அமைந்திருக்க வேண்டும். முறையற்ற வழியில் அமைந்தால் அது இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடும்.

நமது வரவும், செலவும் இஸ்லாம் வலியுறுத்தும் நல்ல வழியில் (ஹலாலாக) அமைய வேண்டும். இறைவன் தடுத்துள்ள (ஹராமான) வழியில் இருக்கக்கூடாது.

ஹராமான தொழில், வருமானம், செலவினங்கள் இவற்றை விட்டும் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் தவிர்த்து நடக்கும்படி இறைவன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

‘அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்’. (திருக்குர்ஆன் 2:275)

‘அளவில் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான்’. (திருக்குர்ஆன் 83:1)

இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

‘நிச்சயமாக அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால், அதன் மூலம் கிடைக்கும் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: தாரகுத்னீ)

‘வட்டி சாப்பிடுபவன், சாப்பிடக் கொடுப்பவன், அதை எழுதுபவன், அதன் இரு சாட்சிகள் ஆகியோரை நபி (ஸல்) சபித்துள்ளார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

‘லஞ்சம் வாங்குபவன், அதை கொடுப்பவன் ஆகியோர் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: இப்னுமாஜா).

ஹலாலான தொழில் செய்து, அதன் வாயிலாக பொருளீட்ட வேண்டும். இவ்வாறு பொருளீட்டுவதற்கு இறைவனே ஆர்வமூட்டுகின்றான்.

‘அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதி களிலும் நீங்கள் செல்லுங்கள். அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே மீளுதல் உள்ளது’. (திருக்குர்ஆன் 67:15)

ஹலாலான தொழில் எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபட்டு ஆகுமான முறையில் சம்பாதிக்க வேண்டும். அதிலிருந்து தானும் உண்ண வேண்டும். பிறருக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அதன் வருமானத்தை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும், தேவைப்படுவோருக்கும் செலவு செய்ய வேண்டும்.

ஆதம் (அலை) அவர்கள் ஆரம்பித்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து, பொருளீட்டித் தான் வாழ்ந்துள்ளார்கள்.

‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை’ என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்’ என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இளைஞராக இருந்தபோது வியாபாரத்தில் ஈடுபட்டு பொருளீட்டியுள்ளார்கள்.

‘ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)

நபி தாவூத் (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு சிறப்பித்து கூறப்படுவதற்கு காரணம் அவர்கள் மன்னராக இருந்தபோதிலும் போர்க்கவசங்களை தமது கையால் செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவர் உண்பார்.

‘தாவூதுக்கு (அலை) நாம் நமது அருளை வழங்கினோம். மலைகளே, பறவைகளே, அவருடன் சேர்ந்து துதியுங்கள் (எனக் கூறினோம்). போர்க் கவசங்களைச் செய்வீராக, அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக’ என (கூறி) அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். ‘நல்லறத்தைச் செய்யுங்கள், நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்’ எனவும் கூறினோம்’. (திருக்குர்ஆன் 34:10,11)

நியாயமான சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்த உணவினால் தான் நல்ல உணர்வு ஏற்படும்; நல்ல செயலும் ஏற்படும். இதனால்தான் இறைவன் தமது திருமறையில் நபிமார்களைப் பார்த்தும், இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்தும் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

‘இறைத்தூதர்களே, (ஹலாலான) ஆகுமான உணவை உண்ணுங்கள். நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்கின்ற செயலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்.’ (திருக்குர்ஆன் 23:51)

‘இறைநம்பிக்கை யாளர்களே, நாம் உங்களுக்கு வழங்கிய (ஹலாலான) ஆகுமானவற்றையே உண்ணுங்கள்’. (திருக்குர்ஆன் 2:172)

இறைத்தூதர்களான நபிமார்கள் ஆகுமான உணவை உண்பதற்காக, தமது குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக யாரிடமும் கையேந்தவில்லை. தமக்கு தெரிந்த, தம்மால் முடிந்த கைத்தொழில்களின் மூலம் சம்பாதித்து பொருளீட்டினார்கள்.

‘எது தூய்மையான சம்பாத்தியம்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒருவர் தமது கையால் உழைப்பதே’ என்று பதில் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ரிபாஆ பின் ராபிஉ (ரலி), நூல்: பஸ்ஸார்)

‘உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு, காலைப்பொழுதில் மலைக்குச்சென்று, விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

‘நாளை மறுமையில் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் எந்த ஒரு அடியானின் இரண்டு பாதங்களும் நகர முடியாது. 1) உனது ஆயுளை நீ எவ்வாறு கழித்தாய்?, 2) உனது வாலிபத்தை நீ எவ்வாறு அமைத்தாய்?, 3) உனது பொருளாதாரத்தை நீ எவ்வாறு சம்பாதித்தாய்?, அதை எந்த விதத்தில் செலவளித்தாய்?, 4) நீ கற்றதின் படி எவ்வாறு நடந்தாய்? என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)

வரவும் முக்கியம், செலவும் முக்கியம். இரண்டுக்குமே இறைவனிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். இரண்டுமே நியாயமான வழியில் அமைய வேண்டும்.

‘யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதை இறைவன் தமது வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளின் கணவனுக்கும் கிடைக்கும். அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

‘தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்தது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

ஆகுமான வழியில் நமது பொருளாதாரத்தை செலவு செய்வதும் இறைநம்பிக்கைதான். அதனடிப்படையில் கல்விக்காக, மருத்துவத்திற்காக, மக்களின் உயிர்நாடியான குடிநீருக்காக, மக்களின் அத்தியாவசிய தேவைக்காக, நாம் நிதி ஆதாரத்தை செலவிட வேண்டும். பசியில் வாடுபவருக்காக அன்னதானம், நோயில் சிரமப்படுவோருக்காக இலவச மருத்துவமனை, தாகத்தால் தவிப்பவருக்காக குடிநீர் தொட்டிகள் போன்றவற்றை அமைப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம். 
Tags:    

Similar News