செய்திகள்
மின்தடை

அரியலூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

Published On 2020-10-19 17:37 GMT   |   Update On 2020-10-19 17:37 GMT
அரியலூரில் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
அரியலூர்:

அரியலூர் துணை மின் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. இது பற்றி முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதற்கு தகுந்தாற்போல் மிக்சியில் மசாலா அரைத்தல் போன்றவற்றை காலையில் மின்சாரம் நிறுத்தப்படும் முன்பே செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திடீரென மின்சாரம் தடைபட்டது. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது, மாலை 6 மணிக்குத்தான் மின்சாரம் வரும், என்றனர்.

முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அறவை மில்கள் உள்பட பல வணிக நிறுவனங்களில் பணிகளும் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அவதியடைந்தனர். நகரில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின் தடை ஏற்பட்ட நிலையில், ஆக்சிஜன் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பல நோயாளிகள் சிரமப்பட்டனர். எனவே இனிவரும் காலங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.
Tags:    

Similar News