ஆன்மிகம்
பக்தர்கள் மத்தியில் அசைந்தாடிய தேர், கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவில் பகுதியில் வந்தபோது எடுத்த படம்

அரோகரா கோஷம் விண்ணதிர பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்

Published On 2021-01-29 03:03 GMT   |   Update On 2021-01-29 03:03 GMT
'அரோகரா' கோஷம் விண்ணதிரும் வகையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூசத்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று தைப்பூசத் திருநாள் ஆகும்.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியான் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பகல் 10.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் கோவிலில் இருந்து முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின், பகல் 11 மணிக்கு சாமி திருத்தேர் ஏற்றம் நடந்தது.

மாலை 4.40 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேங்காய் உடைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ேதரோட்டம் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா'...! என்று விண்ணதிர சரண கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய சிறிய தேர்கள் இரண்டும் 4 ரதவீதிகளில் இழுக்கப்பட்டன. அதன்பிறகு நிலையில் இருந்து 4.45 மணிக்கு திருத்தேர் புறப்பட்டது. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 6.10 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்திருவிழாவில் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தந்தபல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 9-ம் நாளான நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசாமி வீதி உலா, இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வருகிறார்.

10-ம் திருநாளான 31-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறங்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Tags:    

Similar News