உள்ளூர் செய்திகள்
அபராதம்

ஈரோட்டில் ஒரே நாளில் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு அபராதம்

Published On 2022-01-26 08:12 GMT   |   Update On 2022-01-26 08:12 GMT
ஈரோட்டில் ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் பலர் முககவசம் அணியாமல் வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.500-க்கான ரசீது புத்தகம் வராததால் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ரூ.500-க்கான அபராத ரசீது புத்தகம் ஈரோடுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் இந்த ரசீது புத்தகம் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் போலீசார் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, பஸ் நிலையம் அருகே என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர்.

இதேப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்யமங்கலம், கொடுமுடி மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுபோல் முககவசம் அணியாமல் வந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.

Tags:    

Similar News