செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் புறப்பட்ட விவசாயிகள்

டிராக்டர்களில் டெல்லிக்கு புறப்பட்ட பஞ்சாப் விவசாயிகள்... குடியரசு தினத்தன்று பேரணி

Published On 2021-01-17 10:18 GMT   |   Update On 2021-01-17 10:18 GMT
குடியரசு தின விழா நடைபெறும்போது டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர்.
லூதியானா:

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 2 மாதங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடந்தும், எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

விவசாய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்கனவே மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. ஆனால் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர். 

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஏற்கனவே திட்டமிட்டபடி, டெல்லியில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை மிக பிரம்மாண்டமாக நடத்த விவசாய சங்கங்களில் ஒரு பிரிவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து டிராக்டர்களில் விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி புறப்பட்டனர். குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறி உள்ளனர். 

சாரை சாரையாக டிராக்டர்களில் விவசாயிகள் புறப்பட்டு வருவதால் டெல்லி எல்லைகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. 

டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர்களை அனுமதிப்பதை காவல்துறைதான் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, குடியரசு தின விழாவின் பாதுகாப்பு கருதி, விவசாயிகளின் டிராக்டர்கள் அனைத்தும் டெல்லியின் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது. 
Tags:    

Similar News