லைஃப்ஸ்டைல்
சிறுநீரகம்

இந்த 10 விஷயங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்

Published On 2021-06-29 07:28 GMT   |   Update On 2021-06-30 08:21 GMT
சிறுநீரகங்களின் செயல்பாடு முடங்கும்போது வாழ்க்கையே முடங்கிவிடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளை இங்கே தருகிறோம்.
மனித உறுப்புகளில் மிக மென்மையானவை சிறுநீரகங்கள். உடலில் முக்கியமான செயல்பாடுகள் அவைகளால் நடக்கின்றன. அவற்றின் செயல்பாடு முடங்கும்போது வாழ்க்கையே முடங்கிவிடும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான வழிமுறைகளை இங்கே தருகிறோம்.

1. உடல் தகுதியை மேம்படுத்துங்கள். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் கட்டிக்காத்திடுங்கள். நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற ஏதாவது ஒன்றை தினமும் செய்யுங்கள்.

2. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள்.
நீரிழிவு
நோய் இருப்பவர்களில் 30 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். அதனால் நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரை சந்தித்து சிறுநீரகத்தின் செயல்பாடுகளை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

3. ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கவனிக்கவேண்டும். ரத்த அழுத்தத்திற்கான மருந்தினை தவறாமல் உட்கொள்வது அவசியம். உயர் ரத்த அழுத்தத்தினால் இதயபாதிப்பு, பக்கவாதம் போன்றவை உருவாகும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது பெரும் பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் எப்போதும்
ரத்த அழுத்த
த்தை சீராக வைத்திருங்கள்.

4. ஆரோக்கியமான உணவினை சாப்பிடுங்கள். உப்பின் அளவை முடிந்த அளவு குறைத்திடுங்கள். ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த பாலாடைக்கட்டி, கருவாடு போன்றவைகளை சாப்பிடாதீர்கள். பாக்கெட்டுகளில் விற்கும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ளவேண்டாம்.

5. தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருகுங்கள். அதாவது 12 கப் தண்ணீர் பருகுவது அவசியம். அதிகமாக தண்ணீர் பருகினால் உடலில் சேரும் சோடியம், யூரியா போன்ற நச்சுப்பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். சிறுநீரக கல் தொந்தரவு கொண்டவர்கள் அதிகமாக தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று, மேலும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருப்பதற்கான உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

6. புகைப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள். புகைப்பிடித்தால் கிட்னிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்.

7. குறிப்பிட்ட சில வலி நிவாரண மாத்திரைகளும், ஆன்டிபயாடிக்குகளும் சிறுநீரகத்தை பாதிக்கும். அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள். டாக்டரின் ஆலோசனைபடி தேவைக்கு மட்டும் அவைகளை சாப்பிடுங்கள். சிறுநீரக நோய் இருப்பவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடும் முன்பு டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.

8. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். அதிக எடை இருந்தால் அது சிறுநீரகத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

9. பரம்பரை ரீதியாக சிறுநீரக நோய் இருப்பவர்கள் அதிக கவனம் காட்டவேண்டும். அவ்வப்போது தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

10. சிறுநீரக தொந்தரவு இருப்பவர்கள் உணவில் புரோட்டினின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். மாமிச உணவுகளில் புரோட்டின் அதிகம் இருக்கிறது.
Tags:    

Similar News