செய்திகள்
பும்ரா, ஜேம்ஸ் பேட்டின்சன்

டி20-யில் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்: ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் புகழாரம்

Published On 2020-09-16 10:01 GMT   |   Update On 2020-09-16 10:01 GMT
டி20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் ஜேம்ஸ் பேட்டின்சன் புகழாரம் சூட்டியுள்ளா்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணி 4 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வந்தார். அந்த அணிக்காக 11 சீசனில் விளையாடி உள்ளார். அவர்தான் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருக்கிறார். 170 விக்கெட்டுகளை (122 இன்னிங்ஸ்) சாய்த்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் மலிங்கா விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பந்து வீச்சில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் அவருக்கு பதிலாக சரியான மாற்று வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனை மும்பை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்து வீச்சாளரான பேட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைந்தார். தற்போது அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா உலகில் சிறந்த வேகப்பந்து வீரர் என்று பேட்டின்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைந்து பயிற்சி பெற்று வருகிறேன். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அனேகமாக 20 ஓவர் போட்டியில் தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீரர் பும்ரா ஆவார்.

இதேபோல் நியூசிலாந்தைச் சேர்ந்த டிரென்ட் போல்டும் சிறப்பாக வீசக்கூடியவர். இவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த அனுபவமாக இருக்கிறது.

நான் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சில் சில ஒரு நாள் போட்டியில் விளையாடி இருக்கிறேன். இதனால் இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை பற்றிய சிறிய அனுபவம் எனக்கு இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் என்னால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முடியும்.

இவ்வாறு பேட்டிசன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News