செய்திகள்
ரந்தீப் சுர்ஜேவாலா

மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது : 7-ம் ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் கருத்து

Published On 2021-05-30 19:12 GMT   |   Update On 2021-05-30 19:12 GMT
மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது. மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது என்று மோடி அரசின் 7-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மோடி அரசு நாட்டுக்கு தீங்கானது. மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது என்று மோடி அரசின் 7-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், தலைமை செய்தித்தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகால மோடி அரசின் கதை முழுவதும் எப்போதும் இல்லாத பேரழிவுகளும், பொறுப்பை தட்டிக்கழிப்பதும், மக்களை கைவிடுவதுமாக இருக்கிறது.



இந்த அரசு, பிரதமர் மீது மக்கள் வைத்திருந்த உள்ளார்ந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது. இது, நாட்டுக்கு தீங்கானது. ஏராளமான வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 140 கோடி மக்களை மிக மோசமாக வஞ்சித்துள்ளது. எனவே, கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

7-ம் ஆண்டு ஆட்சி முழுவதும் அளவிட முடியாத வேதனையும், மீளமுடியாத பேரழிவும், புரிந்துகொள்ள இயலாத வேதனையும் நிறைந்ததாக உள்ளது. பெருந்தொற்றுக்கு இடையே மக்களை கைவிட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களை பலியாக விட்டு விட்டது.

வறுமைக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக, ஏழை, நடுத்தர, நலிந்த பிரிவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி உள்ளது. வளமான பொருளாதாரத்தை மந்தநிலைக்கு தள்ளி விட்டது. முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் ஏறியதற்கு மோடி அரசே பொறுப்பு. கடுகு எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.200-க்கு மேல் ஏறிவிட்டது.

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் மோடி அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்து விட்டது. சீன படைகளை இந்திய பகுதியில் இருந்து விரடடியடிக்க தவறி விட்டது. மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது.

இத்தகைய சூழ்நிலையில், மோடி உருவாக்கிய பேரழிவில் இருந்து நாட்டை மீட்டு முன்னேற்ற பாதையில் திருப்புவதுதான் காங்கிரசின் முன்னுரிமை பணி. அதை உணர்ந்து காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினாா்.
Tags:    

Similar News