விளையாட்டு
பி.வி.சிந்து, சாய்னா நேவால்

இந்தியா ஓபனில் முன்னேறிய பி.வி.சிந்து- அதிர்ச்சி தோல்வியடைந்த சாய்னா நேவால்

Published On 2022-01-13 16:40 GMT   |   Update On 2022-01-13 16:40 GMT
2017க்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சாய்னாவை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை மாளவிகா பெற்றுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, லக்சயா சென், பிரனோய் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார்கள். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பி.வி.சிந்து, சக வீராங்கனை ஐரா சர்மாவை 21-10 21-10 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறினார். காலிறுதியில் பி.வி.சிந்து, ஆஷ்மிதா சாலிஹாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் வீங்கனை ஹோயாக்சை 21-17 21-14 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

லக்சயா சென், ஸ்வீடன் நாட்டின் பெலிக்ஸ் புரெஸ்டட்டை 21-12, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார். இதேபோல் பிரனோயை எதிர்த்து விளையாடவிருந்த மிதுன் மஞ்சுநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிரனோய் காலிறுதிக்கு முன்னேறினார். 

ஆனால், முன்னாள் சாம்பியனும், 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால், சக வீராங்கனை மாளவிகாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். இப்போட்டியில் 111வது இடத்தில் உள்ள மால்விகா, வெறும் 34 நிமிடங்களில் சாய்னாவை 21-17, 21-9 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதன்மூலம், 2017க்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சாய்னாவை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை மாளவிகா பெற்றுள்ளார். 

முழங்கால் மற்றும் இடுப்பு காயங்களில் இருந்து மீண்டு வந்து உற்சாகமாக ஆடிய சாய்னா, முதல் சுற்றில் வெற்றி பெற்றார். ஆனால், இன்றைய ஆட்டத்தில் அவரால் மாளவிகாவுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. 

தனது உடற்தகுதி இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்று கூறி உள்ள சாய்னா, இதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார். அதேசமயம், மாளவிகா மிகவும் சிறப்பாக விளையாடியதாகவும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் சாய்னா கூறினார்.
Tags:    

Similar News