செய்திகள்
வைகோ

என்னை மீறி, எனது மகனை தொண்டர்கள் அரசியலுக்கு அழைத்து செல்கின்றனர்- வைகோ

Published On 2021-10-12 04:18 GMT   |   Update On 2021-10-12 04:18 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக வைகோ கூறியுள்ளார்.
விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் போலீசாக இருந்தவர். அதனால் போலீஸ் எண்ணத்திலேயே பேசி வருகிறார். அரசியல் கொள்கையை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.



குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதில் பா.ஜ.க.வினரே குற்றச்சாட்டு ஆளாகி இருக்கும் போது எப்படி அவர்கள் கருத்து சொல்ல முடியும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழி காட்டக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர்கள் வீடுகளில் நடக்கும் சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு எனது மகன் துரை வைகோ சென்று கொண்டிருந்தார். நோயால் பாதிக்கப்பட்ட ம.திமு.க.வினருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அவரது படத்தை சுவரொட்டிகளில் போடக்கூடாது என்று கூறினேன்.

ம.தி.மு.க. மாநாட்டுக்கு முந்தைய நாள் இரவு மாநாட்டு பந்தலுக்கு போய், அங்கு துரை வைகோ என்று போடப்பட்ட சுவரொட்டிகளை கிழிக்க சொன்னேன். இனி யாராவது இதில் ஈடுபட்டால் கட்சிவிட்டு நீக்குவேன் என சொன்னேன்.

நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் அவர் வந்துவிடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்து பார்த்தேன்.

அதனை மீறி இப்போது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறி தொண்டர்கள் எங்களுக்கு வழிகாட்டுவதற்கு நல்லதொரு வழிகாட்டி வேண்டும், அதற்கு அனைத்து தகுதியும் உடையவர் துரை வைகோ என அழைத்துக்கொண்டு போகிறார்கள். இது தான் இன்றைக்கு உள்ள நிலைமை.

இந்த கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. என்னால் உருவாக்கப்பட்டதல்ல. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறையில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News