உள்ளூர் செய்திகள்
அரியலூர் அண்ணா சிலை அருகே நீட் தேர்வு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச

அரியலூரில் நீட் தேர்வு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம்

Published On 2022-04-17 09:04 GMT   |   Update On 2022-04-17 09:04 GMT
அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் அண்ணா சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் தேர்வு எதிர்ப்பு தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்று பேசினார், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், தி.மு.க., தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மாநில மொழி பாடத்தில் படித்த மாணவர்கள் 97 சதவீத மருத்துவ இடத்தை பெற்றனர். மத்திய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் 3 சதவீத இடங்களை மட்டுமே பெற்றனர். ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு மத்திய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் சுமார் 65 சதவீத மருத்துவ இடத்தை பெற்றுள்ளனர்.

இது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும், மத்திய கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நகரப் பகுதி மற்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்ய முன்வருவார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். நீட் தேர்வால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் யாரும் வராத நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மூட வேண்டிய நிலை ஏற்படும்.

இதையடுத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவரும் மத்திய அரசு மருத்துவத்தையும் தனியாருக்கு விற்பனை செய்ய வாய்ப்புண்டு. அப்போது, மருத்துவமனைக்கு உள்ளே செல்வதற்கே கட்டணம் செலுத்தி செல்லவேண்டிய சூழல் ஏற்படும்.

எனவே, நீட் தேர்வு தேவையில்லை என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி வலியுறுத்தி வருகிறார் என பேசினார்.

Tags:    

Similar News