செய்திகள்
கைது செய்யப்பட்ட சயோனி கோஷ்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் இன்று தர்ணா போராட்டம்

Published On 2021-11-21 22:41 GMT   |   Update On 2021-11-21 22:41 GMT
திரிபுராவில் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சயோனி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அகர்தலா:

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் 2023 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 25ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் திரிபுராவில் முகாமிட்டு பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

திரிபுராவில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டம் ஒன்றில் முதல் மந்திரி பிப்லப் கலந்து கொண்டார். தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். அந்த சமயத்தில், அவர்கள் மீது வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சயோனி கோஷ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றிய முதல்கட்ட சான்று கிடைத்துள்ளது. இதனால் கோஷ் மீது 307, 153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அகர்தலா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என மேற்கு திரிபுராவின் கூடுதல் எஸ்.பி. பி.ஜே. ரெட்டி கூறியுள்ளார்.

இந்நிலையில், திரிபுராவில் சயானி கோஷ் கைது சம்பவத்தை கண்டித்தும், போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர் எனக்கூறி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுகேந்து ராய், கல்யாண் பானர்ஜி மற்றும் தோலா சென் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News