செய்திகள்
கழிவு நீரை ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

திருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

Published On 2020-11-21 08:51 GMT   |   Update On 2020-11-21 08:51 GMT
திருவெண்காடு அருகே சாலையில் கொட்டுவதற்காக கழிவு நீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவெண்காடு:

திருவெண்காடு நெய்தவாசல் சாலையில் எட்டு கமா பகுதியில் இரவு நேரங்களில் தனியார் லாரிகளில் கழிவு நீர் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதாகவும், கழிவுநீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாகவும் புகார்கள் வந்தன. 

இந்தநிலையில் நேற்று காலை திருக்கடையூர் பகுதியில் இருந்து கழிவு நீரை கொண்டு வந்து நெய்தவாசல் சாலையில் கொட்டப்படுவதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கழிவு நீரை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன், திருவெண்காடு காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதவன், சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கராஜன், கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர், இனிமேல் இந்த பகுதியில் கழிவுநீர் கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News