செய்திகள்
ஓ. பன்னீர்செல்வம்

தூத்துக்குடியில் அதிமுக 48-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

Published On 2019-10-16 16:40 GMT   |   Update On 2019-10-16 16:40 GMT
தூத்துக்குடியில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார் என்று மாவட்ட செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர்ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. 48-ம் ஆண்டு தொடக்க விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைப்படி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. தொடக்க விழா துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி முன்னிலை வகிக்கிறார். அமைச்சர்கள் தங்கமணி (மின்சாரத்துறை), திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை), ஜெயக்குமார் (மீன்வளம்), காமராஜ் (உணவுத்துறை),செல்லூர் ராஜூ (கூட்டுறவு), ஓ.எஸ்.மணியன் (கைத்தறி), ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை), ராஜேந்திரபாலாஜி (பால்வளம்), விஜயபாஸ்கர் (மக்கள் நல்வாழ்வுத்துறை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (போக்குவரத்து), பாஸ்கரன் (கதர்), வெல்லமண்டி நடராஜன் (சுற்றுலா), பெஞ்சமின் (ஊரக தொழில்துறை), சரோஜா (சமூகநலம்), வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் நலம்), ராஜலட்சுமி (ஆதிதிராவிடர் நலம்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

விழாவையொட்டி நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோர் உருவச் சிலைகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி பேரூராட்சி, ஊராட்சி, வட்டக்கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News