ஆன்மிகம்
கொங்கனூர் மாரியம்மன் கோவிலில் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொங்கனூர் மாரியம்மன் கோவிலில் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2021-03-05 07:02 GMT   |   Update On 2021-03-05 07:02 GMT
ஸ்ரீகொங்கனூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், முடி காணிக்கை, கிடா வெட்டுதல், அக்னி கரகம் எடுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
தேவூர் அருகே சென்றாயனூரில் உள்ள ஸ்ரீகொங்கனூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கடந்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடம், பூங்கரகம் எடுத்தும், கடவுள் வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா புறப்பட்டது. கொட்டாயூர், நல்லங்கியூர், வட்ராம்பாளையம் வழியாக கொங்கனூர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது,

பின்னர் சரபங்காநதியில் பக்தர்கள் புனித நீராடி அலகு குத்துதல், சிறுவர்கள் உடம்பில் சேற்று மண்ணை தடவிக்கொண்டு சேத்து முட்டி சட்டி எடுத்தல், 1008 முறை நிலத்தில் படுத்து எழுந்து வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முடி காணிக்கை, கிடா வெட்டுதல், அக்னி கரகம் எடுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News