செய்திகள்

முறைகேடு புகார் - கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமிஷனர் நடவடிக்கை

Published On 2018-04-08 01:28 GMT   |   Update On 2018-04-08 01:28 GMT
முறைகேடு மற்றும் விதிமுறை புகார்கள் எதிரொலியாக 143 கூட்டுறவு சங்கங்களுக்கு நடக்க இருந்த தேர்தலை அதிரடியாக ரத்து செய்து, தேர்தல் கமிஷனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
சென்னை:

கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கைத்தறி-துணிநூல், வீட்டுவசதி உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.

2018-ம் ஆண்டுக்கான கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் தேர்தல் 5 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் நிலையில் உள்ள 4 ஆயிரத்து 698 கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மாதம் (மார்ச்) 26-ந்தேதி வேட்பு மனு தாக்கல் நடந்தது.

ஆனால் வேட்புமனு தாக்கலின்போது ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகவும், பெரும்பாலும் அ.தி.மு.க.வை சேர்ந்தோரே வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. கடும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான முதல்நிலை தேர்தலில் 4 ஆயிரத்து 366 கூட்டுறவு சங்கங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியின்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 31 சங்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில், ‘கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுதாக்கலின் போது விதிமுறைகள் மீறல் தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்’, என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு தகவல் வழங்கப்பட்டு உள்ளது.



அதில் ‘கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முதல்நிலையில் 97 சங்கங்கள் மற்றும் இரண்டாம் நிலையில் 25 சங்கங்கள் என 122 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்’, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் 2-ம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற இருந்தநிலையில், 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

அந்தவகையில் திருவாரூரில் 5, நாகையில் 4, வேலூரில் 3, சென்னையில் 2 மற்றும் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், காஞ்சீபுரம், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தேர்தல் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷனர் எம்.ராஜேந்திரன் கூறியதாவது:-

விதிமுறை மீறல் பிரச்சினை காரணமாக ஏற்கனவே 122 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மேலும் 21 கூட்டுறவு சங்கங்களுக்கு நடத்தப்பட்ட வேட்புமனு தாக்கலின்போது விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த 21 கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விதிமுறை மீறல் புகார்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதால் இன்னும் பல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
Tags:    

Similar News