செய்திகள்
எச்.ராஜா-குஷ்பு

பாஜகவில் சிறப்பு அழைப்பாளர்களாக எச்.ராஜா, குஷ்பு நியமனம்

Published On 2021-10-07 08:36 GMT   |   Update On 2021-10-07 10:12 GMT
பொன். ராதாகிருஷ்ணன் கட்சி பணியில் ஈடுபடுவதையே விரும்பியதால் அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

பா.ஜனதாவில் இணைந்த பிறகு நடிகை குஷ்புவுக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த மாநில தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

அதேபோல் தோல்வியை தழுவிய அண்ணாமலை கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் குஷ்புவுக்கும்
முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் குஷ்புவுக்கு புதிய பொறுப்பாக ‘சிறப்பு அழைப்பாளர்’ என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பதவி எதுவும் இல்லாமல் இருந்த எச்.ராஜாவுக்கும் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பவர்கள் கட்சியின் தேசிய அளவில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் பதவி எதுவும் இல்லாமல் இருந்தார். இல.கணேசன், டாக்டர் தமிழிசை வரிசையில் அவரும் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னர் ஆக்கப்படலாம் என்று கருதப்பட்டது.



ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் கட்சி பணியில் ஈடுபடுவதையே விரும்பினார்.

எனவே அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News