செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா

அமளியால் மக்களவையில் 22 சதவீத பணிகளே நடைபெற்றன -சபாநாயகர் தகவல்

Published On 2021-08-11 08:22 GMT   |   Update On 2021-08-11 12:50 GMT
மக்களவை கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு சுமுகமாக நடைபெறாதது வருத்தம் அளிப்பதாகவும், இந்த முறை அதிக அளவு இடையூறுகள் இருந்ததாகவும் சபாநாயகர் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாகவே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கின. இன்றும் அமளி நீடித்ததால் முன்கூட்டியே மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதுபற்றி பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு சுமுகமாக நடைபெறாதது வருத்தம் அளிப்பதாகவும், இந்த முறை அதிக அளவு இடையூறுகள் இருந்ததாகவும் கூறினார்.



‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்திலும் பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட்டது. இரவு நீண்ட நேரம்கூட விவாதம் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டனர். இதை தீர்க்க முடியவில்லை. 

இந்த கூட்டத்தொடரில் மக்களவை 21 மணி 14 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. 22 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதா உட்பட மொத்தம் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் நன்றி.  அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தை பேண வேண்டும்’ என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News