உள்ளூர் செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

நிதி நிறுவன உரிமையாளரை கடத்திய 7 பேர் கைது

Published On 2022-04-15 10:13 GMT   |   Update On 2022-04-15 10:13 GMT
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவக்குமார் தனது கூட்டாளியான குரு என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் சாலை தோட்டம் பகுதியை சேர்ந்த பொலியன் (வயது 40). இவர் தாராபுரம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அத்துடன் பழைய கார் வாங்கி விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் பொலியன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நண்பர் உதவியுடன் நெல்லை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40) என்ற நபர் நடத்தி வரும் பரணி பைனான்சில் பொலியன் ரூ.20 லட்சம் வட்டிக்கு  பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

பணத்தை வாங்கிய பொலியன் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். தொடர்ந்து பொலியனிடம் சிவகுமார் தனது பணத்தை கேட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவக்குமார் தனது கூட்டாளியான குரு என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு அவர் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். அதன்படி குரு தனது நண்பர்கள் மூலம் கரூரிலிருந்து ராஜா (38), வெங்கடேஷ்(32), தங்கதுரை(30), சத்திய மூர்த்தி(30), மணிகண்டன்(25), தினேஷ் (30) ஆகியோரை அழைத்து கொண்டு தாராபுரம் வந்தார்.

பின்னர் பொலியனை காரில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தாராபுரம் மற்றும் அலங்கியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தாராபுரம்  போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் அலங்கியம் போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும்  தகவல் தெரிவித்தனர். 

போலீசார் தேடுவதை அறிந்த குரு காரில் உடுமலை சாலையில் உள்ள ஒரு காட்டுக்குள் காரை நிறுத்தி பதுங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற போது ரஞ்சிதாபுரம் அருகே போலீசில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவக்குமாரை கைது செய்ய போலீசார் நெல்லைக்கு விரைந்துள்ளனர்.  
Tags:    

Similar News