செய்திகள்
கர்நாடக கோவில்களில் 60 சதவீத வருவாய் இழப்பு

கொரோனா வைரஸ் பரவல்: கர்நாடக கோவில்களில் 60 சதவீத வருவாய் இழப்பு

Published On 2020-08-08 02:51 GMT   |   Update On 2020-08-08 02:51 GMT
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக கோவில்களில் 60 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்து சமய நிறுவன அறக்கட்டளை ஆணையர் ரோகினி சிந்தூரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 3 மாதங்களாக மக்களை அந்த வைரஸ் புரட்டியெடுத்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேரை அந்த வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 8-ந்தேதி வரை அனைத்து கோவில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் மூடப்பட்டு இருந்தன. அதன் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் முக்கியமான கோவில்களில் இன்னும் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு திருவிழா, தேர்த்திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு, எளிமையாக நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை, சிறப்பு தரிசனம் உள்ளிட்ட சேவைகளால் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்து சமய நிறுவன அறக்கட்டளை ஆணையர் ரோகினி சிந்தூரி கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் நாட்டில் அனைத்து துறைகளிலும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதுபோல் அறநிலையத் துறையிலும் பொருளாதார இழப்பு உருவாக்கியுள்ளது. இதை மறைக்க முடியாது. தற்போதைய நிலையில் கோவில்களில் 50 முதல் 60 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இயல்புக்கு திரும்ப சில மாதங்கள் ஆகும். இது அறநிலையத் துறைக்கு நிச்சயம் வருவாய் இழப்பு தான்.

கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்டு இருந்த போது பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கொரோனா பீதியில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஆர்வம்காட்டுவதில்லை. இதனால் கோவில்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வருவாய் இழப்பை சரியாக இதுவரை கணக்கிடவில்லை. அவ்வாறு கணக்கிடுவது கடினமான வேலை ஆகும். சராசரியாக 60 சதவீத வருவாய் இழப்பு உருவாகி உள்ளது.

சில மாவட்டங்களில் உள்ள கோவில்களின் உண்டியல் காணிக்கை இன்னும் எண்ணப்படாமல் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு அந்த உண்டியல் பணம் எண்ணப்படும். கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டும், கொரோனா பாதிப்பு காரணமாக சில கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. கர்நாடக இந்து அறநிலையத் துறை சார்பில் மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன், குக்கே சுப்பிரமணியா சாமி, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர், மைசூரு சாமுண்டிமலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், பெலகாவி ரேணுகா எல்லம்மா தேவி கோவில், கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில், பனசங்கரி கோவில் உள்பட 7 கோவில்களில் இ-சேவை மூலம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News