செய்திகள்
கோப்புபடம்

உரத்தட்டுப்பாடு - விற்பனை பிரச்சினையா? விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்

Published On 2021-11-25 06:59 GMT   |   Update On 2021-11-25 06:59 GMT
வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, வட்டார வேளாண்மை அலுவலர் சுனில் கவுசிக் உட்பட குழுவினர் உரங்கள் இருப்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.
குடிமங்கலம்:

குடிமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு விவசாய சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி சாகுபடிகளில் கூடுதல் விளைச்சல் பெற உரமிட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் பருவமழையை ஆதாரமாகக் கொண்டு 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படும். நடப்பு சீசனில் நல்ல மழை பெய்துள்ளதால் வழக்கத்தை விட உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

அடியுரம் மற்றும் மேல் உரத்திற்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளதால் உரங்களின் இருப்பு மற்றும் செயற்கை விலையேற்றம் குறித்தும், யூரியாவுடன் பிற உரங்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வேளாண் துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, வட்டார வேளாண்மை அலுவலர் சுனில் கவுசிக் உட்பட குழுவினர் உரங்கள் இருப்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.

வட்டாரத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்களின் இருப்பு, விற்பனை முனைய கருவி வாயிலாக உர விற்பனை ரசீது வழங்கல், விலைப்பட்டியல் பராமரித்தல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ரபி பருவத்தில், மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி தொடங்க உள்ளதால் தட்டுப்பாடு இல்லாமல் உரங்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகள் உரத்தட்டுப்பாடு மற்றும் உர விற்பனை குறித்த புகார்களை 97884 25208 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News