சிறப்புக் கட்டுரைகள்
அன்னையர் தினம்

நாளை அன்னையர் தினம்: அம்மா செய்ததை தெய்வமும் செய்ததில்லை

Published On 2022-05-07 09:02 GMT   |   Update On 2022-05-07 09:02 GMT
அப்பா எடுத்த சிவப்புக்கலரோ நீலக்கலரோ, அதை எந்த புகாரும் இல்லாமல் சாமி தெருவுக்கு வருகிற நாளில் கட்டிக்கொண்டு மாவிளக்கு பிசைந்தார்கள்.

உணவகம் ஒன்றில் காப்பி குடித்தபடி போனை பார்த்தேன். யூ டியூப் சேனலில் ஒரு காணொலி. அம்மாவைப் பற்றி சிறுவர்கள், இளைஞர்கள், வளரிளம் பெண்கள் பகிரும் காணொளி.

‘என் செயினும் தாயின் சிறந்த தமரில்லை’ என்கிறது நான்மணிக்கடிகை.

அம்மாவைப் பற்றி பேசுகிறபோதே, உணர்ச்சிவயப்பட்டு குரல் உடைகிறார்கள்.

பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவனாக இருந்தாலும், கார்ப்ரேட் அலுவலகத்தில் பணி செய்யும் யுவதியாக இருந்தாலும், பணிநிறைவு செய்த முதியோராக இருந்தாலும், அம்மாவைப்பற்றி பேசும்போது கண்கள் பனிக்கின்றன.

நம் வாழ்வின் முதல் சுவையை ஊட்டியவள் அம்மா.

‘உண்ண உண்ண தெவிட்டாதே – அம்மை

உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்பான் பாரதி.

நம் எல்லோருடைய அம்மாக்களும் அப்படிதான்.

எம் அம்மாக்கள் புளிகொண்டு துலக்கிய பித்தளைச் செம்புகளில் பால் கறக்க தொழுவம் செல்வார்கள். கன்றை அவிழ்த்துவிட்டு பால்குடிக்கச் செய்வார்கள். அவை மார்பில் முட்டி பாலைச் சுரக்க வைக்கும். எங்கள் அம்மாக்கள் போலவே அந்த பசுக்களும் தனது கன்றின்மீது அன்பைப் பொழியக் கூடியவை. செம்பு நிறையும் வேளையில் பசு பாலை அடக்கிக் கொள்ளும்.

அம்மாவும் எங்களுக்கு பால் கொடுத்தவள்தானே, ‘சரியான திருட்டுப் பசு’ என்று செல்லமாகக் கடிந்தபடி கன்றை அவிழ்த்து விடுவாள். முட்டி முட்டிக் குடித்தக் கன்று பிறகு தோட்டமெங்கும் குதித்தோடும்.

எங்கள் அம்மாக்கள் சினிமாவில் வந்த பண்டரிபாய், கே.ஆர்.விஜயா, சுஜாதா அம்மாக்களைப்போல அவ்வளவு அழகானவர்களோ, நாசுக்கானவர்களோ, புத்திசாலிகளோ அல்லர். அவர்கள் ஒரு பஸ் ஏறி பக்கத்து நகருக்கு போகத் தெரியாதவர்கள்.

நாங்கள் வடக்குவெளியில் கிளிமூக்கு மாங்காய்த் திருடி மண்ணில் விழுந்தோம். ஆர்த்தோ படிக்காத அம்மாக்கள் நல்லெண்ணையைத் தடவி காலை நீவிச் சுளுக்கெடுத்தார்கள். வீங்கிய தசையில் வாகையிலையால் பற்று போட்டுவிட்டார்கள்.

நாகரிகம் அண்டாத வீடுகளில் சதாகாலம் வேர்வையோடும் அழுக்கோடும் வளைய வந்த எங்கள் அம்மாக்களுக்கு ஒரு புடவை எடுக்கத் தெரியாது. கடைக்காரன் கலைத்துப்போட்ட புடவைகளின் முன்னால், நீங்களே ஏதாவது எடுங்க! என்பார்கள் அப்பாவைப் பார்த்து.

அப்பா எடுத்த சிவப்புக்கலரோ நீலக்கலரோ, அதை எந்த புகாரும் இல்லாமல் சாமி தெருவுக்கு வருகிற நாளில் கட்டிக்கொண்டு மாவிளக்கு பிசைந்தார்கள்.

எங்கள் முட்டை மார்க்கைப் பார்த்து, ‘உங்க அம்மாகிட்ட கொடுங்க!. பொறிச்சு கொடுப்பாங்க!’ என்றார் கணக்கு வாத்தியார்.

‘வருடம் முழுசும் எம்பிள்ளைக்கு நீ என்னதான் சொல்லிக்கொடுத்த?’ என்று அவரிடம் சண்டைக்கு போகமாட்டாள் அம்மா!

அவளுக்கும் உலகில் ஒரு அடிமை இருந்ததென்றால் அது மாரியாத்தாதான்! குளித்துவிட்டு ஈரச்சேலையோடு வரும்போது அதைத்தான் திட்டுவாள்!

எங்கள் எல்லாத் தவறுகளுக்கும் எழரைச்சனியின் சதியே காரணமென கிளிஜோசியக்கா ரன் சொன்னதை நம்பிய அப்பாவி அம்மாக்கள்!

பாவம், என்னதான் தெரிந்திருந்தது எங்கள் அம்மாக்களுக்கு? விசேட காலங்களில் கொஞ்சம் பாண்ட்ஸ்பவுடர் பூசி, சாமந்தியோ டிசம்பர் பூவோ சூடி, உதட்டுக்கு மேலே அரும்பியிருந்த பூனைமுடிகளை உள்ளங்கையளவு கண்ணாடியில் கவலையோடு பார்த்தவர்கள்.

எப்போதோ அவள் கோபித்துக்கொண்டு பிறந்தவீடு போனாள். பெரியம்மாவோ சித்தியோ சோறுபோட்டார்கள். எங்கள் வயிறு நிறைந்திருந்தது. மனதில் அம்மாவின் கண்ணீர் விழுந்து கொண்டே இருந்தது.

அப்பா கன்றைக் கட்டாமல் விட்டிருந்தார். எங்கள் மாடங்களில் நல்ல விளக்கெரியவில்லை. அடுப்பை ஊதிஊதிப்பார்த்த அப்பாவால் பற்றவைக்க முடியவில்லை.

தாத்தாவோடு மறுநாள் வந்தாள் அம்மா. தொழுவத்தில் பசு அம்மாவென்றுக் கத்தியது. பெரியப்பாவிடம் ‘மகாலஷ்மியைக் கொடுத்திருக்கோம்!’ என்றார் தாத்தா. ‘எல்லாம் சரியாயிடும் மாமா!’ என்பார் பெரியப்பா.

கிராமத்து அம்மாக்கள் கிளைபரப்பி, விழுதிறங்கிய ஆலமரம் போன்றவர்கள். நர்சரியில் வாங்கி வருகிற குரோட்டன்ஸ் போல கொஞ்சம் மண்ணோடும் கொஞ்சம் ஈரத்தோடும் ஒரு பிளாஸ்டிக் பையில் அவர்களைப் பிடுங்கி எடுத்து வந்துவிட முடியாது.

அவர்களால் வெறும் ஞாபகங்களோடு வாழ முடியாது. அவர்கள் ஆசையாசையாய் வளர்த்த கிடாய்களும், கிடாரிகளும், பசுக்களும், கன்றுகளும் இன்றில்லை. காலியான தொழுவம் கூட இல்லை. இடுகாட்டில் கிடக்கிற ஒரு மண்டையோடு போல அதன் சிதிலம் மட்டுமே மிச்சம் இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு அதைப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!

வீட்டுக்காரனோடு, பிள்ளைகளோடு சின்னச் சின்ன வரப்புகளில் நடந்தே பழகியவள். அவள் கண்ணுக்கெட்டிய திசைகளில் கண்டதெல்லாம் நெல்லும் கம்பும் சோளமும் எள்ளும் கடலையும். அந்த நிலத்தில் உழைத்துப் பசியெடுத்த எல்லோருக்கும் பெரிய அண்டா நிறைய சோற்றை வடித்து, நாலுமுழ வேட்டியில் கொட்டி ஆற வைத்த மகராசி!

தான் சாப்பிட்டோமா? ஒரு நல்லத் துணி கட்டினோமா? தன்னை, சாப்பிட்டியா? என்று கேட்டார்களா? என்ன உடம்பு சுடுகிறது, ஆஸ்பத்திரிக்கு போகலாம் வா! என்று ‘ கூப்பிட்டார்களா? எதையும் யோசிக்கத் தெரிந்ததில்லை அவளுக்கு.

புருஷன், பிள்ளைகள் என்றே ஓடிக்கொண்டிருந்தவள். குடும்பத்தின் மிச்சங்களில் வாழ்ந்தவள். எதுவும் சொல்லாமல் பாதி வழியில் கட்டியவன் விடைபெறுவான்! என்பதை நினைத்திருக்க மாட்டாள். பிள்ளைகளும் எங்கோ சென்றுவிடுவார்கள்! என்று யோசித்திருக்க மாட்டாள்.

கணவன் இல்லாத, பிள்ளைகள் இல்லாத அம்மாக்களின் பகலுக்கு வெளிச்சமில்லை. ராத்திரிக்கு தூக்கமில்லை.

‘புளிக்குழம்பு எனக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்ல, அப்புறம் ஏன் வச்ச!’ என்று தட்டை எட்டி உதைச்ச மகன், அப்படி திட்டியபோதுகூட, சந்தோஷமாகத்தான் இருந்தாள். நம்மிடம் கேட்காமல் பிள்ளை யாரிடம் கேட்பான். அவசர அவசரமாக வெங்காயத்தை அறிந்து, மிளகாயை கிள்ளிபோட்டு, காய்களே இல்லாமல் சாம்பார் வைத்து கொடுத்தவள்.

போனில் அவர்களின் சம்பிரதாயமான விசாரிப்புக்கு பதில் சொல்ல அவளிடம் சொற்கள் இருந்ததில்லை.

மழை ‘சோ’ என்று பெய்த ஒரு நாள். அம்மா ஆளுக்கொரு கிண்ணத்தில் சுடு சோற்றை போட்டுக் கொடுத்தாள். தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் கொடுத்தாள். தன் பங்கு அப்பளத்தை முடித்துவிட்டு வெறும் சோற்றை பிள்ளையின் கை துழாவியது. தன்னுடைய அப்பளத்தை கொடுத்தாள் அம்மா.

பிள்ளைகளுக்கு அம்மாவின் ஞாபகம் போதும். அம்மாக்களுக்கோ அவர்களுக்கு தூளி கட்டிய விட்டம், அவர்கள் நடைவண்டி பழகிய தெரு, குடும்பத்தோடு வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்ட தாழ்வாரம், பொங்கலுக்கு தீபாவளிக்கு குடும்பத்தோடு விழுந்து கும்பிட்ட சாமி படம், கடைசியாக தண்ணீர் மொண்டுவந்து வீட்டுக்காரனை குளிப்பாட்டிய தாமரைக்குளம், தலைமாட்டில் வைத்த நிறை மரக்கால், எல்லாம் தேவை.

குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைத்து தேய்ந்த அம்மாக்களுக்கு இந்த உழுகுடி வாழ்வு அப்படி என்னதான் மிச்சம் வைத்தது?

ஒரு எல்.இ.டி டி.வி, ஒரு ஏ.சி., ஒரு வாஷிங் மெஷின், ஒரு செல்போன், மாலைபோட்ட புருஷன் படம், ஊருக்குத் தெரிந்தால் பிள்ளைகள் கவுரவம் கெட்டுவிடுமே! யாருக்கும் கேட்காதபடி ரகசியமான அழுகை! தவிர.

யூடியூப் சேனல்காரர், ‘எதற்காகவெல்லாம் அம்மாவிடம் சாரி கேட்பீர்கள்? என்கிற கேள்விக்கு ஆளுக்கொரு பதில் சொல்கிறார்கள். எல்லா பதில்களும் கண்ணீரின் குளிரும், அழுகையின் வெப்பமும் நிறைந்தவை.

‘எதற்காக அம்மாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’

எல்லோரிடமும் ஒரே பதில்தான் இருக்கிறது. என்னைக் கேட்டால் நானும் இதைதான் சொல்லி இருப்பேன்.

நான் கொடுத்த எல்லா சிரமங்களையும் அம்மா மறந்தாள். மன்னித்து அவள் எங்களோடே இருக்கிறாள். இதற்காக அவளுக்கு நாங்கள் வாழ்நாளெலாம் கடன்பட்டிருக்கிறோம்!

‘ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்!’ என்கிறது தமிழர் அற இலக்கியம் நான்மணிக்கடிகை.

அம்மா செய்ததை தெய்வமும் செய்ததில்லை. எச்சில் துடைத்து, சளி துடைத்து, சீழ் துடைத்து , மலம் துடைத்து , சகல குற்றங்களையும் துடைத்து,என் அம்மா செய்ததை, எந்த தெய்வமும் செய்ததில்லை.

என் பிள்ளைகள் திருமண வயதில் இருக்கிறார்கள். என் தாயிடம் என்னைப் பற்றி கேளுங்கள்? ‘முள் நீக்கி மீன் சாப்பிடத் தெரியாது. கபடு சூது அறியாத பிள்ளை மனம் கொண்டவன். யார் எது சொன்னாலும் நம்பிவிடுவான். இந்த மண்ணில் எப்படி வாழப்போகிறானோ?’ என்று கவலைப் படுவாள்.

கட்டையில் வேகிற வரை பிள்ளைகளைக் குழந்தைகளாக எண்ணுபவளே தாய்.

இந்த உலகத்தில் குழந்தைகளின் மேகம் அம்மாவின் முந்தானை.

பயிர்களை மழை வளர்த்தன. வேர்களில் விழுந்த அம்மாவின் கண்ணீர், குழந்தைகளை வளர்த்தன.

தாய் எப்போதும் தெய்வமாக மட்டுமே இருந்தது கிடையாது. பேயாகவும் அடித்திருக்கிறாள். ஆனாலும் குழந்தைகள், அம்மா நம் கிளைகளை ஒடிக்கவில்லை. முட்களை நீக்குகிறாள்! என்றே எடுத்துக் கொள்கின்றன.

அம்மாதான் நமக்கு நதிபோல ஓடக் கற்றுத் தந்தாள். மலைபோல வளரக் கற்றுத்தந்தாள். விழும்போதெல்லாம் அம்மாவின் ஞாபகமே நம்மை எழத்தூண்டுகிறது.

மூக்குத்தியை அடமானம் வைத்து பீஸ் கட்டியவளுக்கு தங்கத்தில் ஒரு சோடி வளையல் வாங்கித்தரவேண்டும். காலமெல்லாம் ஒரு கடைத் தெருவுக்குப் போகாமல் களைவெட்டி படிக்கவைத்தாளே அம்மா, அவளை பெரிய ஜவுளிகடைக்கு அழைத்துப்போய் , நல்லதாக ஒரு புடவை வாங்கித் தரவேண்டும் என நினைத்திருப்போம்.

அவ்வாறு நினைத்த காலை, சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பறவையைப்போல இந்த மண்ணைவிட்டு நீங்கி விடுகிறாள் அம்மா !

அவள் பழைய புடவையில் முகம் புதைத்து, நள்ளிரவில் கண்ணீர் விடுகிறோம்.

‘எனக்கு அம்மா இல்லை அண்ணா!’ ஒரு சிறுவன் கலங்குகிறான்.

அம்மா நம் வேர், நம் கிளை.

வேரில்லாத, கிளையில்லாத அந்த சிறுவனின் வெய்யில் என்னை வறுத்தியது.

இந்த மண்ணில் நாம் அநாதைகள்! என உணர வைப்பது அம்மாவின் மரணம். ஆனால், குழந்தைகள் தாங்கள் சாகிறவரை அம்மாவை சாகவிடுவதில்லை.

பத்து மாதம் சுமந்தவளை.. தம்மை குழியில் வைக்கிறவரை நினைவில் சுமக்கிறார்கள் பிள்ளைகள்!

Tags:    

Similar News