லைஃப்ஸ்டைல்
பெண்கள் விரும்பும் நவீன சமையலறை

பெண்கள் விரும்பும் நவீன சமையலறை

Published On 2021-06-17 03:20 GMT   |   Update On 2021-06-17 03:20 GMT
சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது.
முன்பெல்லாம் சமையலறை விசாலமானதாக இருக்கும். பெரிய விறகு அடுப்புகள், ஆட்டு உரல், அம்மி, பெரிய பெரிய பானைகள், அண்டாக்கள் என சகலமும் வைக்கும் அளவுக்கு இடவசதியுடன் இருக்கும். ஆனால் இன்றைக்கு நெருக்கடியில் வீடும் சுருங்கி, சமையலறையும் மிகவும் குறுகிவிட்டது. அதாவது குறைந்த இடத்தில் பல வசதிகளை வாரி வழங்கும் வகையில் இன்றைய நவீன சமையலறை அமைக்கப்படுகிறது. சமையலறையை மிகப் பெரிதாக அமைக்க வேண்டிய அவசியம் நவீன சமையலறைகளில் இல்லவே இல்லை. குறைவான இடத்தில் தேவையான அலமாரிகளை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும்
சமையலறை
யின் தோற்றமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்துவிடுகிறது.

சமையலறையின் மேடை மிகவும் வசீகரமாக அமைக்கப்படுகிறது. மேடையிலேயே சமையல் எரிவாயு அடுப்பானது பதிக்கப்படுகிறது. மேடை மீது துருத்திக்கொண்டு அடுப்பு அமையாமல் அடக்க ஒடுக்கமாக, அமைந்துவிடுகிறது. அதன் மீது அமைக்கப்படும் நவீன புகைபோக்கி புகையைச் சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுகிறது. நவீன புகைபோக்கி, அடுப்புக்கு மேலேயே அமைக்கப்படுவதால் சமையலின்போது ஆவியாகும் எண்ணெய் புகையும், சப்பாத்தி போன்ற உணவைத் தயாரிக்கும்போது ஏற்படும் புகையும் வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டு விடுகிறது. இதனால்
சமையலறை
யில் புழங்குவோர் கண் எரிச்சலின்றி, தும்மலின்றி நிம்மதியாக வேலை செய்ய முடியும்.

சமையல் மேடையின் கீழே உள்ள இடத்தை அழகாக மரப் பலகைகளால் அழகுபடுத்தி விதவிதமான கதவுடன் கூடிய அலமாரிகள் அமைக்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற சமையல் பொருட்களும் காய்கறிகளும் வைப்பதற்கு அவசியமான அலமாரிகள் உள்ளடங்கி அமைக்கப்படுகின்றன. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கும் இதிலேயே இடம் கிடைத்துவிடுகிறது. சமையல் கருவிகளான மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஒவன் போன்றவற்றை எல்லாம் அழகாக வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுகின்றன.

இப்படிச் சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது. பாத்திரங்களைக் கழுவுவதற்கு மேடையில் ஓரத்திலேயே கழுவு தொட்டி அமைத்துவிடுகிறார்கள். அவ்வப்போது சமையல் வேலைகளுக்கிடையே பாத்திரங்களைக் கழுவி அதன் இடத்தில் இருத்திவிட்டு இயல்பாகப் பிற வேலைகளைக் கவனிக்க இயலும்.

இத்தகைய நவீன சமையலறைகளை உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப விதவிதமாக அமைத்துக்கொள்ள முடியும். நவீன சமையலறையைத் தகுந்த நிபுணர்கள் கொண்டு அமைக்க வேண்டும். செலவு சிறிது அதிகம் ஆகும் என்றாலும் அதன் வசதிகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒத்துழைத்தால் நவீன சமையலறையை அமைத்துக்கொள்ளலாம்.
Tags:    

Similar News