ஆன்மிகம்
அழகுமுத்து ஐய்யனார்

அழகுமுத்து ஐய்யனார் கோவில் கும்பாபிஷேக திருப்பணி 6-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-11-14 04:30 GMT   |   Update On 2019-11-14 04:30 GMT
தென்னம்பாக்கம் அழகுமுத்து ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோவில் திருப்பணி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ளது.
கடலூர் தூக்கணாம்பாக்கம் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐய்யனார் கோவில் உள்ளது. இதன் பின்புறத்தில் உள்ள கிணற்றின் மீது, அழகர் சித்தர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த, சித்தர் அங்கேயே ஜீவசமாதி அடைந்ததாக பக்தர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில், வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் சித்திரை மாதம் வரக்கூடிய முதல் திங்கட்கிழமையில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். மேலும், தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற ஆயிரக்கணக்கான சிமெண்டு பொம்மைகள் வைத்து செல்வது வழக்கம். இதனால் கோவிலுக்கு வந்தால் ஏராளமான பொம்மைகளை அங்கு காணலாம்.

பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையேற்று, இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.

இதையொட்டி, கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கும்பாபிஷேக விழாவுக்கான திருபணி வேலைகளை தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருகிற 6-ந்தேதி (அடுத்தமாதம்) திருப்பணியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கணக்காளர் சரவணன் மற்றும் ஜோதி, மகே‌‌ஷ் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News