செய்திகள்
வைகோ

கெயில் எரிவாயு குழாய்களை சாலையோரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ கோரிக்கை

Published On 2021-08-11 13:35 GMT   |   Update On 2021-08-11 13:35 GMT
அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கெயில் திட்டம் சாலையோரமாக மட்டுமே அமைக்கப்படும், விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதற்கு அனுமதி கிடையாது என சட்டமன்றத்தில் தெரிவித்ததாக வைகோ கூறியுள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள மதிப்புமிக்க விவசாய நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் திட்டத்தை எதிர்க்கவில்லை. சாலையோரமாக எரிவாயு குழாய்களைப் பதித்து, விவசாய நிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மாபெரும் இயக்கத்தை நடத்தி வந்தார்கள்.

அனைத்து கட்சிகளுடன் இணைந்து விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கெயில் திட்டம் சாலையோரமாக மட்டுமே அமைக்கப்படும், விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகளின் வாழ்வாதாரமே மிக முக்கியம் என அரசின் முடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதா இருந்தவரை நிறுவனத்திற்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. அவரது மறைவிற்குப் பின்பு அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14.2.2020 அன்று மேற்படி திட்டத்தை செயல்படுத்துவதற்கு கெயில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, ஏழு மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார்.

தற்போது திராவிட முன்னேற்றக்கழகம் மாபெரும் வெற்றி பெற்று, மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, எட்டு வழி சாலை திட்டம் ரத்து, ஹைட் ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் 7 மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முந்தைய அரசு கொடுத்த அனுமதி உத்தரவை ரத்து செய்து, கெயில் திட் டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும். இன்றுவரை 10 ஆண்டுகளாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Tags:    

Similar News