செய்திகள்
பி.ஆர். பாண்டியன்

விவசாயிகளை திரட்டி தலைமைச் செயலகம் முற்றுகை- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published On 2021-09-04 13:18 GMT   |   Update On 2021-09-04 13:52 GMT
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உத்தமபாளையம்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வக்கீல் சங்க கூட்டமைப்பு துணை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க செயலாளர் ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். பி.ஆர்.பாண்டியன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்றால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு தேனி மாவட்டம் பாலைவனம் ஆகி விடும். வைகை அணையில் இருந்து குடிநீர் வழக்கம் போல கொண்டு செல்லலாம். வைகை அணையில் 30 அடி மண் படிந்துள்ளது. எனவே முழுமையாக தண்ணீர் தேக்க முடியாத சூழல் உள்ளது.

எனவே அணையை தூர் வாரி முழு அளவு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றுக்கு அருகில் கிணறு தோண்டி மேடான பகுதிகளுக்கு புன்செய் நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல 1975-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தார். ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு அந்த அரசாணையை ரத்து செய்வதாக கூறுகிறது. எனவே மீண்டும் அதனை அமல்படுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தாவிட்டால் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

அடுத்தகட்டமாக விவசாயிகளை ஒன்று திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவும் தயங்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி -சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

Tags:    

Similar News