செய்திகள்
சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் இன்று தொடங்காது- மாநகராட்சி கமிஷனர் தகவல்

Published On 2021-04-30 19:30 GMT   |   Update On 2021-04-30 19:30 GMT
போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் இன்று தொடங்காது என சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டைவிட தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் உச்சம் 2,250 என இருந்தது. தற்போது 6,200 வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதேபோல் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இதனை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது 33 ஆயிரத்து 500 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 60 முதல் 70 சதவீதம் பேர் வீட்டுத்தனிமையிலும், 15 முதல் 20 சதவீதம் பேர் கொரோனா பராமரிப்பு மையத்திலும், 10 முதல் 12 சதவீதம் பேர் உயர் மருத்துவ சிகிச்சையிலும் உள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. வெளி இடங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கலாம் என்ற அடிப்படையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்குவதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் 3 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதி கூடுதலாக கிடைத்துவிடும்.

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட 65 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. ‘கோவேக்சின்’ தடுப்பூசி போதிய அளவு இருப்பு இல்லாததால், முதல் ‘டோஸ்’ போடுவதை நிறுத்தி வைத்துள்ளோம். 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் நாளையே (அதாவது இன்று) உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பு இல்லை. போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. எனவே திட்டம் நாளை (இன்று) தொடங்காது. அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கூடுதலாக 120 டாக்டர்கள், 100 நர்சுகளை பணியில் சேர்த்துள்ளோம். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். 2.67 சதவீதமாக இருந்த கொரோனா இறப்பு விகிதம் தற்போது 1.46 சதவீதமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News