உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

Published On 2022-05-07 10:37 GMT   |   Update On 2022-05-07 10:37 GMT
திருச்சியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் முக்கொம்பு, கல்லணையை பார்வையிட்டனர்.
திருச்சி:

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 61-வது கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த குழுவினர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை, தஞ்சை மாவட்டம் கல்லணையில் ஆய்வு செய்தனர்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், 2018-ல் ஒழுங்காற்றுக் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் 61-வது கூட்டம், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் வி.சத்தியமூர்த்தி,

கேரள மாநில பாசனத் துறை தலைமைப்பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மேலாண் இயக்குநர் கே.ஜெய்பிரகாஷ், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன், கோவையில் உள்ள காவிரி மற்றும் தென்னக நதிகள் அமைப்பின் தலைமைப் பொறியாளர் டி.கே,சிவராஜன், கர்நாடக மாநில நீர்வள ஆதாரத் துறையனி கூடுதல் தலைமை செயலர் ராகேஷ்சிங்

மற்றும் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி, மத்திய தோட்டக்கலை அமைச்சகத்தின் ஆணையர் உட்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்வள ஆதார அமைப்பின்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் குழுவினர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை மற்றும் தஞ்சை மாவட்டம் கல்லணை ஆகியவற்றை பார்வையிட்டு, நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

திருச்சியில் 2019 அக்டோபர் 31-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 19-வது கூட்டம் நடைபெற்ற போது விவசாய சங்கத்தினர் மற்றும் செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குழுவின் தலைவர் நவீன்குமாரை சந்தித்து விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தக் குழுவின் கூட்டம் இணைய வழியில் நடைபெற்ற நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு மீண்டும் நேரடியாக திருச்சியில் நேற்று இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News