செய்திகள்
ஏர்பிரான்ஸ் ஏர்லைன்ஸ்

சிறப்பு பூஜையுடன் சென்னை - பாரீஸ் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

Published On 2021-06-28 19:20 GMT   |   Update On 2021-06-29 07:05 GMT
கொரோனா வைரஸ் ஊரடங்கால் மத்திய அரசு வெளிநாட்டுப் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
சென்னை:

இந்தியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசுக்கு டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்துதான் விமான சேவை இயங்கி வந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து பாரீசுக்கு செல்பவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று தான் பிரான்ஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இல்லை என்றால் சென்னையில் இருந்து துபாய் வழியாக பாரீசுக்கு செல்ல வேண்டும். எனவே சென்னையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு நேரிடையாக விமான சேவையை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 26ம் தேதி ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. அதன்படி அன்று காலை 10.25 மணிக்கு பாரீசில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு 11.45 மணிக்கு சென்னை வந்தடைந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1.20 மணிக்கு சென்னையில் இருந்து பாரீசுக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்டு செல்வதற்கு முன்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் விமான நிறுவனத்தினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.



இந்த ஏா்பிரான்ஸ் போயிங் விமானத்தில் 279 இருக்கைகள் உள்ளன. விமானத்தின் பயண நேரம் 10 மணி 25 நிமிடங்கள். விமானத்தின் ஜன்னல்கள் மற்ற விமான ஜன்னல்களைவிட 30 சதவீதம் அகலமானது. இந்த விமானம் வானில் பறக்கும்போது அதிக அதிர்வுகள் இல்லாமல் மிதந்தபடி செல்லும் சொகுசு விமானம்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. எனவே இந்த விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சை, கார்ப்பரேட் நிறுவன பணியாளா்கள் போன்ற அத்தியாவசிய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

இதனால் வாரத்துக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 8-ந் தேதியில் இருந்து வியாழக்கிழமை பாரீசில் இருந்து சென்னைக்கு விமானம் வந்து விட்டு, வெள்ளிக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News