செய்திகள்
மல்லிகை பூ

தஞ்சையில் பூக்களின் விலை உயர்வு

Published On 2020-01-14 09:40 GMT   |   Update On 2020-01-14 09:40 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை வரலாறு காணாத அளவுக்கு கிலோ ரூ.3000 வரை விற்கப்பட்டது.
தஞ்சாவூர்:

தமிழர் பண்டிகையான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து தமிழர்களாலும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகை சீசன் காரணமாக தஞ்சையில் தற்போது கரும்பு, மஞ்சள், காய்கறிகள், வெல்லம் உள்ளிட்ட பொங்கல் சம்பந்தமான அனைத்துப் பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் பூக்களின் விற்பனையும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஏற்கனவே பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்து உள்ள நிலையில் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக விலை மேலும் அதிகரித்துள்ளது.

தஞ்சையின் பிரதான பூ மார்க்கெட்டுகளில் ஒன்றான பூக்காரத் தெருவில் உள்ள பூ சந்தையில் இன்று பூக்கள் வாங்க பெண்கள் அதிகளவில் வந்தனர். பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இருப்பினும் பூக்களின் விற்பனையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் அமோகமாக நடந்து வந்தது. பண்டிகை காலங்களில் விலை உயர்வு வாடிக்கைதான் என்பதால் அதனை பற்றி கவலைப்படாமல் பெண்கள் தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.

பூச்சந்தையில் நேற்று முல்லை கிலோ 1000 என இருந்தது. ஆனால் இன்று ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. ஜாதிப்பூ கிலோ-ரூ. 1200, 1 கிலோ ரோஜா 200 முதல் 300 வரையும், செவ்வந்தி கிலோ ரூ.100 வரை விற்பனையானது. மல்லகை பூ மதியம்வரை விற்பனைக்காக பூச்சந்தைக்கு வரவில்லை. மாலையில் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மல்லிகை பூ விற்கப்பட்டது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு கிலோ ரூ.3000 வரை விற்கப்பட்டது.

இது பற்றி பூ வியாபாரிகள் கூறும்போது:-

தற்போது கடும் பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மல்லிகை பூ விளைச்சல் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. தஞ்சையில் சில இடங்களில் மட்டும் விற்கப்படுகிறது. இன்னும் 3 நாட்கள் வரை இந்த விலை உயர்வு இருக்கும். அதன் பிறகு பழைய மாதிரி பூக்களின் விலை ஓரளவு குறையும் என்றனர்.
Tags:    

Similar News