குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் தற்கொலை அதிகரிப்பதன் பின்னணி

குழந்தைகள் தற்கொலை அதிகரிப்பதன் பின்னணி

Published On 2022-01-08 02:38 GMT   |   Update On 2022-01-08 02:38 GMT
குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் கல்வி கற்கும் விஷயத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. இவர்களும் மற்ற மனிதர்களை போலவே பல கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 11,396 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் கொரோனா நோய் பாதிப்புக்குள்ளாகி மரணத்தை தழுவவில்லை. தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. ஒரு நாளில் சராசரியாக 31 பேர் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டில் 9,613 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 9,413 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மரணம் அடையும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. குடும்ப பிரச்சினை காரணமாக 4,006 இறப்புகள் நடந்துள்ளன. காதல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 1,337 பேர் தற்கொலை முடிவை நாடி இருக்கிறார்கள். நோய் பாதிப்புக்குள்ளாகி 1,327 பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். வேலையின்மை, நிதி சிக்கல், போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கருவுறுதல் போன்ற பிற காரணங்களும் அங்கம் வகிக்கின்றன.

இவை அனைத்துக்கும் ஒட்டுமொத்த காரணியாக மன நல பிரச்சினை விளங்குகிறது. இந்தியாவில் மனநலம் பற்றி அரிதாகவே பேசப்படுகிறது. குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் கல்வி கற்கும் விஷயத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. இவர்களும் மற்ற மனிதர்களை போலவே பல கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். அவை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு அவர் களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மனநலப் பிரச்சினைகளை சமாளிக்க உதவ வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு முன்பாகவே உளவியல் ரீதியான மன உளைச்சலை பல குழந்தைகள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்துவிட்டது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதில் நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டது. குழந்தைகள் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். அதுவும் அவர்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிப்படைய செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் காரணமாக குழந்தைகள் தங்களை புதிய கல்வி முறைக்கு மாற்றியமைக்க வேண்டியிருந்தது. கணினி அல்லது ஸ்மார்ட்போன் முன்பு நீண்ட நேரம் செலவிட வேண்டியிருந்தது. இதுவும் மன அழுத்தத்திற்கு வழிவகுத்து விட்டது. ‘‘சில சமயங்களில் ஆன்லைன் வகுப்புகள் இடைவெளி இல்லாமல் நீண்ட நேரம் நடக்கின்றன. கணினி, லேப்டாப், டேப்லட் போன்ற கேஜெட்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக பல குழந்தைகள் மனநல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதுவும் உளவியல் ரீதியான துயரத்திற்கு வழிவகுத்துவிடும்’’ என்கிறார், டாக்டர் பஜாஜ்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனநலம் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கவனிக்க வேண்டும். அவர்களுடன் பேச வேண்டும். நட்பாக பழக வேண்டும். அதன் மூலம் எந்த பிரச்சினையையும் ஆரம்ப கட்டத்திலேயே சமாளிக்க முடியும்.

மன அழுத்தமில்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

கல்வி மற்றும் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட உலகம் உள்ளது என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பூங்கா, சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது, குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற சில வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தேர்வு நேரத்தில் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை கற்றுக்கொடுக்கலாம்.
Tags:    

Similar News