உள்ளூர் செய்திகள்
முகாமில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது எடுத்த படம்.

உடுமலையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

Published On 2021-12-04 08:12 GMT   |   Update On 2021-12-04 08:12 GMT
உடுமலை நகராட்சியில் 1 முதல் 11-வார்டு வரை வசிக்கும் மக்களுக்கு ஒரு பகுதியாகவும் பிற பகுதி மக்களுக்கு மற்றொரு பகுதியாகவும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம்:

மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் உடுமலையில் தனியார் திருமண மண்டபங்களில் இரண்டு இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்கள் மனுக்கள் அளிக்க கோரிக்கை வாரியாக வீட்டுமனை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என தனித்தனியாக பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில்:-
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்திட வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று அதனை நிறைவேற்றி கொடுத்து வருகிறோம். 

அந்த வகையில் உடுமலை நகராட்சியில் 1 முதல் 11-வார்டு வரை வசிக்கும் மக்களுக்கு ஒரு பகுதியாகவும் பிற பகுதி மக்களுக்கு மற்றொரு பகுதியாகவும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நீங்கள் கொடுக்கக்கூடிய மனுக்களை பெற்று அவற்றை மாவட்ட கலெக்டர் மூலம் பரிசீலனை செய்து உரிய அதிகாரியிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. வும்,தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர தி.மு.க. செயலாளர் எம்.மத்தீன், அவைத்தலைவர் ஆசாத், நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News