ஆன்மிகம்
விழாவை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

சீர்காழி சட்டநாதர் கோவிலில் குடமுழுக்கு திருப்பணி விழா தொடக்கம்

Published On 2021-08-28 03:06 GMT   |   Update On 2021-08-28 03:06 GMT
சீர்காழி சட்டநாதர்கோவிலில் குடமுழுக்கு திருப்பணி விழா தொடங்கியது. இதில் தருமபுரம், மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மன்- பிரம்மபுரீஸ்வரர் கோவிலான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்மன் ஞானப்பால் ஊட்டிய இடமாகும்.

மூன்று தளங்களில் அமைந்துள்ள இந்த கோவில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலை மீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்கு மேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் ஒரே கோவிலில் அருள்பாலிக்கிறார்.

அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த கோவில் பைரவ ஷேத்திரம் என்று கூறப்படுகிறது. சமயக் குரவர்களால் தேவாரம் பாடப்பெற்ற இந்த கோவிலில் 1991-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி குடமுழுக்கிற்கான திருப்பணிகள் நேற்று ெதாடங்கின.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 27-வது மடாதிபதி மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காறு பாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News