செய்திகள்
கோப்புப்படம்

சிரியாவில் இஸ்ரேல் வான் தாக்குதலில் 23 பேர் பலி

Published On 2021-01-13 22:49 GMT   |   Update On 2021-01-13 22:49 GMT
சிரியாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்:

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.

இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. சிரியா எல்லைக்குள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்களை சிரிய வான்பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கிறது.

இந்த நிலையில் சிரியாவில் ஈராக் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள டெயிர் அல் சவுர், மாயதீன், புவ்கமல் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தின.

அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மேற்கூறிய நகரங்களில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் எதுவும் குறிப்பிடவில்லை.

அதேசமயம் இஸ்ரேலின் வான் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 15 பேர் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் என்றும் 8 பேர் சிரியாவைச் சேர்ந்த அப்பாவி மக்கள் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News