செய்திகள்
அபிஜித் பானர்ஜி

நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு மோடி - சோனியா வாழ்த்து

Published On 2019-10-14 16:06 GMT   |   Update On 2019-10-14 16:06 GMT
நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
 
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. 

வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்த பொருளியல் நிபுணர்கள்  மைக்கேல் கிரீமர், அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இந்தியாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘2019-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ள அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  அபிஜித் பானர்ஜி வறுமையை ஒழிப்பத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல், அபிஜித் பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

நோபல் பரிசு வென்று சிறப்பு மிக்க சாதனை செய்ததை தவிர அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது சக பொருளியலாளர்கள் உலகில் நிலவி வரும் வறுமையை ஒழிப்பதில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை சிறப்பு வாய்ந்தது. அபிஜித் பானர்ஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்தியாவின் வறுமையை ஒழித்து, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசியின் ’நியாய்’ திட்டத்துக்கு செயல் வடிவம் அளிக்க அபிஜித் பானர்ஜி முக்கிய பங்காற்றியுள்ளார். ஆனால் தற்போதய மோடி அரசு பொருளாதாரத்தை அழித்து, வறுமையை ஊக்குவிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News