செய்திகள்

கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2018-07-31 17:13 GMT   |   Update On 2018-07-31 17:13 GMT
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை வட்ட வழங்கல் அதிகாரி நேற்று பறிமுதல் செய்தார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி பாண்டியம்மாளுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி பாண்டியம்மாள் தலைமையில் ஆய்வாளர் ஆனந்த கோபால் உள்ளிட்டவர்கள் வடசேரி பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கேரள பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் இருக்கைக்கு அருகே சில மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனே அதிகாரிகள் அந்த மூடைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக பஸ் நிலையத்தில் கடை நடத்தி வருபவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அரிசி மூடைகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

இதே போல பள்ளவிளை பஸ் நிறுத்தத்திலும் மறைவான இடத்தில் சுமார் 400 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை ஆய்வு நடத்தி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் இவற்றையும் பதுக்கி வைத்திருந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 850 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் கோணத்தில் உள்ள அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்தில் அரிசி மூடைகள் ஒப்படைக்கப்பட்டன. 
Tags:    

Similar News