ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் நாளை நடக்கிறது சித்திரை பெருவிழா கொடியேற்றம்

Published On 2021-04-08 09:12 GMT   |   Update On 2021-04-08 09:12 GMT
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் நடந்தது.

கொடியேற்று விழாவையொட்டி நேற்று வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை பிச்சாண்டேஸ்வரர் புறப்பாடு நடக்கிறது.. நாளை(வெள்ளிக்கிழமை) காலை சந்திரசேகரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலுக்குள் புறப்பாடாகி காலை 6 மணிக்கு மேல் 6. 45 மணிக்கு சதய நட்சத்திரத்தில் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து தினமும் சாமி புறப்பாடு நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது.

அன்று காலை 6 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. அதை தொடர்ந்து வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியிறக்கம் நடக்கிறது.

இந்த சித்திரை பெருவிழாவில் 18 நாட்களும் காலை திருமுறை விண்ணப்பமும், மாலை திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News