செய்திகள்
லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் இறுதி அஞ்சலி கூட்டத்தில் பிரியங்காபங்கேற்ற காட்சி.

லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகள் இறுதி அஞ்சலி கூட்டத்தில் பிரியங்கா பங்கேற்பு

Published On 2021-10-13 02:05 GMT   |   Update On 2021-10-13 02:05 GMT
பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு, 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் மறைவுக்கு இறுதி பிரார்த்தனை மேற்கொண்டனர்.
லக்னோ :

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதா தொண்டர்கள் சென்ற கார்கள் மோதியதில், 4 விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் பலியானார்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் ஆறுதல் கூறினர்.

இந்தநிலையில், பலியான விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது. லக்கிம்பூர் கேரியில் உள்ள டிகோனியா கிராமத்தில் நடந்தது. அங்குள்ள மைதானத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

பலியான 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளரின் புகைப்படத்துடன் அவர்களுடைய குடும்பத்தினர் மேடையில் அமர்ந்திருந்தனர். பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், தர்ஷன்சிங் பால், ஜோகிந்தர்சிங் உக்ரகான், தர்மேந்திர மாலிக் உள்ளிட்ட சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிர்வாகிகளும் மேடையில் இருந்தனர்.

மேடையில் அரசியல் தலைவர்கள் யாரும் ஏறக்கூடாது என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அதனால், ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்றபோதிலும், யாரும் மேடை ஏறவில்லை.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இதர காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பங்கேற்றார். பலியான விவசாயிகள் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பொதுமக்களிடையே அமர்ந்தார்.

அவர் மேடையில் பேச விருப்பம் தெரிவித்தபோது, விவசாய சங்க தலைவர்கள் அனுமதி மறுத்து விட்டனர். அரசியல் சர்ச்சைகளை உருவாவதை விரும்பாததால், அவர்கள் அப்படி செய்தனர். மேலும், தங்கள் இயக்கத்தை அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று மேடையில் எச்சரிக்கை விடுத்தனர்.

சமாஜ்வாடி கட்சியின் மாவட்ட தலைவர் ராம்பால்சிங் யாதவ் உள்ளிட்ட அக்கட்சி பிரமுகர்கள், ராஷ்டிரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு, 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் மறைவுக்கு இறுதி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். லக்னோ போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி., ஐ.ஜி. உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் டிகோனியா கிராமத்தில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்தனர்.

இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இன்று (புதன்கிழமை) சந்தித்து முறையிடுகிறது. இதற்காக நேரம் ஒதுக்கக்கோரி, ஜனாதிபதிக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டு இருந்தது.

ஜனாதிபதி இன்று காலை 11.30 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். அதனால் அந்த நேரத்தில் காங்கிரஸ் குழு, அவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கிறது. இக்குழுவில், ராகுல்காந்தி, பிரியங்கா, மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால் ஆகிய 7 பேர் இடம்பெறுகிறார்கள்.

Tags:    

Similar News