செய்திகள்
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்

மரணம் அடைந்த சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

Published On 2019-07-19 04:39 GMT   |   Update On 2019-07-19 04:39 GMT
மறைந்த சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
சென்னை:

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், கடந்த 2001-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வதாக திருமணம் செய்ய ஆசைப்பட்ட ராஜகோபால், அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்த வழக்கில் பூந்தமல்லி கோர்ட்டு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

கடந்த 2004-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு எதிராக ராஜகோபால் அப்பீல் செய்தார். ஆனால் ஐகோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜகோபால் முறையிட்டார். 10 ஆண்டுகளாக நடந்த இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

உடனடியாக கோர்ட்டில் சரண் அடைந்து சிறை செல்லவும் உத்தரவிட்டது. ஆனால் ராஜகோபால் உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு கால அவகாசம் கேட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதற்கு அனுமதிக்கவில்லை.உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று கூறியது.

இதனை தொடர்ந்து ஸ்ட்ரெச்சரில் வந்து ஐகோர்ட்டில் படுத்த படுக்கையாக சரண் அடைந்த ராஜகோபால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனியார் ஆஸ்பத்திரியில் ராஜகோபாலை சேர்க்க ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதன்படி வடபழனி விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார்.

ராஜகோபால் ஆயுள் கைதியாக உயிரிழந்துள்ளதால் சிறைத்துறை சட்டவிதிகளின் படி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இன்று மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ராஜகோபாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கே.கே.நகரில் உள்ள வீட்டில் ராஜகோபாலின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதன்பின்னர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகருக்கு ராஜகோபாலின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஊர் மக்களின் அஞ்சலிக்கு பின்னர் சொந்த மண்ணில் ராஜகோபாலின் உடல் அடக்கம் நடக்கிறது.
Tags:    

Similar News