செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 சுகாதார பணியாளர்களுக்கு அலர்ஜி

Published On 2020-12-17 23:57 GMT   |   Update On 2020-12-17 23:57 GMT
அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில், மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் 2 பேருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது
நியூயார்க்:

அமெரிக்காவில், அவசர பயன்பாட்டுக்காக பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பார்ட்லெட் மண்டல மருத்துவமனையில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில், அந்த மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் 2 பேருக்கு அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் பெண் சுகாதார பணியாளர் ஒருவருக்கு தடுப்பூசி போட்ட 10 நிமிடத்தில் முகம் மற்றும் உடலில் எரிச்சல், இதயதுடிப்பு அதிகரிப்பு, மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றொருவருக்கு கண்களில் வீக்கம், தலைச்சுற்றல், தொண்டை கரகரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களில் மேற்கண்ட இருவருக்கு மட்டும் தான் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News