செய்திகள்
ஜெயில் தண்டனை

குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை

Published On 2020-11-10 14:34 GMT   |   Update On 2020-11-10 14:34 GMT
குழந்தைகள் திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் நடத்தும் உரிமையாளர்கள் தங்களது திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த வருவோர்களிடம் மணமகன் மணமகள் ஆகியோரின் வயதை நிருபிக்கும் சான்று அவசியம் பெற வேண்டும்.

அதில் 18 வயதிற்கு குறைவாக உள்ள பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அதுகுறித்து தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காமல் திருமணம் நடப்பதாக தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்பவர்கள் மீது குழந்தை திருமணம் தடைச்சட்டம் படி குழந்தை திருமணம் நடைபெற உடந்தையாக இருந்ததாக கருதப்பட்டு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

அதே போல் கோவில்களில் திருமணம் நடத்த பதிவு செய்ய வருபவர்களிடம் கோவில் செயல் அலுவலர்கள் அவசியம் வயது நிருபிக்கும் சான்று (பள்ளி ஆவணம் பிறப்பு சான்று) பெற்று அதில் 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும். இதுபற்றிய புகார்களை குழந்தைகள் உதவி மையம் கட்டணமில்லா எண்.1098, மாவட்ட சமூகநல அலுவலகம் 04362-264505 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 04362-237014 ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News