லைஃப்ஸ்டைல்
கொரோனா தாக்கினால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?

கொரோனா தாக்கினால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?

Published On 2021-01-19 03:24 GMT   |   Update On 2021-01-19 03:24 GMT
கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
கர்ப்பிணிகளை கொரோனா கூடுதலாக தாக்கும் என்று கூறுவது சரியா? இல்லை! ஆனால் சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கும் உண்டு. கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன. ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.

கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.

அந்தந்த காலகட்டங்களில் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டரை சந்திப்பதை தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கும். லேசான உடல் உபாதைகள் இருந்தால் டாக்டரை போனில் அழைத்து ஆலோசனை பெற்றால் போதுமானது.

கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் முன்பின் யோசிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக டாக்டரை சந்திக்க செல்லவேண்டாம். முதலில் உங்கள் மகப்பேறு டாக்டருக்கு தகவலைத் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை செய்த பின்பு அங்கு செல்லுங்கள். ஆனால் இதில் காலதாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது.

பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள். உங்களோடு சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யையும் பாதுகாக்கவேண்டியது இருக்கிறது. அதனால் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.

தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம். ஆனாலும் இதுவரை உள்ள மருத்துவ ஆய்வுத் தகவல்கள்படி, பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்றே தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒருசிலருக்கு மாதம் முழுமை அடையும் முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியனும் தேவைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.

பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.

தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது. குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும். 
Tags:    

Similar News