செய்திகள்
மேக்ஸ்வெல் - சுமித்

ஐ.பி.எல். வீரர்கள் நாளை ஏலம் - மேக்ஸ்வெல், சுமித் மீது அதிகமான எதிர்பார்ப்பு

Published On 2021-02-17 10:32 GMT   |   Update On 2021-02-17 10:34 GMT
ஐபிஎல் வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில் மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம்.

சென்னை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு அணிகளும் ஏற்கனவே தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவித்தன.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நாளை (18 ந் தேதி) நடக்கிறது. மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஏலம் நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164 பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மொத்தம் 1114 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இதில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 292 வீரர்களாக குறைத்து இறுதிப் பட்டியலை வெளியிட்டது.

இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் ரூ196.60 கோடி வரை செலவழிக்கின்றன.

இந்தியாவை சேர்ந்த ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் மற்றும் மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), மொய்ன் அலி, ஜேசன் ராய், மார்க்வுட், சாம்பில்லிங்ஸ் பிளங்கெட் (இங்கிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) ஆகிய 10 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 12 வீரர்களுக்கு ரூ ரூ.1.5 கோடியும், 11 வீரர்களுக்கு ரூ.1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம். இருவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் கடந்த சீசனில் முறையே பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் விளையாடினார்கள்.

இதேபோல ஜேசன் ராய், ஆரோன் பிஞ்ச், டேவிட் மலன் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனாலும் அந்த அணி 18 வீரர்களை தக்க வைத்தது.

ஹர்பஜன் சிங், பியுஸ் சாவ்லா, கேதர் ஜாதவ், முரளி விஜய், மோனு சிங் மற்றும் ஓய்வு பெற்ற வாட்சன் ஆகிய 6 பேர் விடுவிக்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பா வாங்கப்பட்டார்.

சி.எஸ்.கே. விடம் ரூ.19.9 கோடி இருக்கிறது. 6 வீரர்களை தான் ஏலத்தில் எடுக்க முடியும். வெளிநாட்டு வீரர்களில் ஒருவரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். மேக்ஸ்வெல், சுமித், ஜேசன் ராய், மொய்ன் அலி ஆகியோரில் ஒருவரை எடுக்க முயற்சிக்கும்.

பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.53.2 கோடி இருக்கிறது. ஐ.பி.எல் ஏலத்தில் ராஜஸ்தான் ரூ.37.85 கோடியும், பெங்களூர் ரூ.35.4 கோடியும், மும்பை ரூ.15.35 கோடியும், டெல்லி ரூ.13.4 கோடியும் ஐதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா ரூ.10.75 கோடியும் செலவழிக்கலாம். 


Tags:    

Similar News