வழிபாடு
லட்சுமணன், ராமர்

மரமாக மாறிய லட்சுமணன்- ஆன்மிக கதை

Published On 2022-02-25 08:21 GMT   |   Update On 2022-02-25 08:21 GMT
ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாராக, ராமபிரான் அவதரித்தார். அப்போது லட்சுமணன் புளியமரமாக நின்று அவருக்கு நிழல் தந்து சேவை புரிவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
ராமாவதாரம் முடிவுறும் தருவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில், ராமபிரான் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்ல வேண்டும். அதைப் பற்றி ரகசியமாக பேசுவதற்காக, ராமபிரானை சந்திக்க எமதர்மன் வந்திருந்தார். ராமரும், எமதர்மனும் ஒரு அறைக்குள் நுழைந்தனர். அதற்கு முன்பாக தம்பி லட்சுமணனை அழைத்த ராமபிரான், “நாங்கள் பேசும் சமயத்தில் யார் வந்தாலும், உள்ளே அனுமதிக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டுச் சென்றார்.

ஆனால் விதி துர்வாச முனிவரின் உருவத்தில் வந்தது. ராமபிரானும், எமதர்மனும் இருந்த அறைக்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தான், லட்சுமணன். அந்தநேரம் பார்த்து துர்வாச முனிவர் அங்கு வந்தார். கோபத்திற்கு பெயர் போன அவர் லட்சுமணனிடம், “நான் உடனடியாக ராமபிரானைப் பார்க்க வேண்டும். என்னை உள்ளே அனுமதி” என்று கேட்டார்.

அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்தான். ஆனால் துர்வாசரோ, “நீ என்னை அனுமதிக்காவிட்டால், இந்த அயோத்தி நகரையே எரித்து சாம்பலாக்கி விடுவேன்” என்று கர்ஜித்தார்.

இதனால் பயந்து போன லட்சுமணன், வேறு வழியின்றி அவரை உள்ளே அனுமதித்தான்.

ஆனால் தன்னுடைய கட்டளையை மீறிய லட்சுமணன் மீது கோபம் கொண்ட ராமபிரான், “நீ மரமாகப் போ” என்று சபித்தார். அதைக் கேட்டதும் கண் கலங்கிய லட்சுமணனைக் கண்டு, ராமபிரானும் வருந்தினார். கோபத்தில் இப்படி ஒரு சாபத்தை தம்பிக்கு கொடுத்து விட்டோமே என்று மனம் கலங்கினார்.

இப்படியொரு சாபத்தை அளித்ததற்காக தன்னை மன்னிக்கும்படி ராமபிரான் கேட்டார். பதறிப்போன லட்சுமணன், “அண்ணா.. நீங்கள் சாபம் அளித்ததற்காக நான் கண் கலங்கவில்லை. இதுநாள் வரை உங்களுக்கு சேவை செய்வதே என்னுடைய பாக்கியம் என்று கருதினேன். இந்த சாபத்தால் உங்களுக்கு நான் சேவை செய்ய முடியாமல் போய் விடுமே என்றுதான் வருந்துகிறேன்” என்றான்.

அதைக் கேட்டு மகிழ்ந்து போன ராமபிரான், “லட்சுமணா.. எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக, நானும் பூலோகத்தில் 16 ஆண்டுகள் அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. அப்போது மரமாக மாறும் நீயே, எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய்” என்றார்.

அதன்படியே திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாராக, ராமபிரான் அவதரித்தார். அப்போது லட்சுமணன் புளியமரமாக நின்று அவருக்கு நிழல் தந்து சேவை புரிவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்த மரத்தை ‘தூங்காப்புளி’ என்பார்கள். ஏனெனில் இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. மரமாக இருக்கும் லட்சுமணன், ராமரை கண் இமைக்காமல் பாதுகாப்பதாக ஐதீகம்.
Tags:    

Similar News